குறுங் காணொலி உருவாக்கும் டிக் டாக் உள்ளிட்ட செயலிகளுக்குப் போட்டியாக, யூடியூப் ஷார்ட்ஸ் என்கிற புதிய தளத்தின் பரிசோதனை வடிவம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே சந்தையில் டிக் டாக்குக்குப் போட்டியாக புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்ய கூகுள் நிறுவனத்தின் யூடியூப் தளம் முயற்சி செய்து வந்தது. அதிகபட்சம் 15 விநாடிகளுக்குப் பயனர்கள் காணொலிகளை உருவாக்கும் வகையில் யூடியூப் ஷார்ட்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்தப் பரிசோதனை வடிவில் ஒரு சில கூடுதல் அம்சங்கள் பயனர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஒவ்வொரு நாட்டிலும் இந்தத் தளம் அறிமுகம் ஆகும்போது கூடுதல் வசதிகளும் அறிமுகமாகும்.
மொபைல்கள் மூலம் குறுகிய காணொலிகளை உருவாக்க விரும்பும் யூடியூப் பயனர்களுக்கு ஷார்ட்ஸ் புதிய அனுபவத்தைத் தரும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. காணொலிகளை உருவாக்குவது, கண்டறியப்படுவது, பார்ப்பது ஆகிய மூன்று முக்கிய அம்சங்களில் ஷார்ட்ஸ் கவனம் செலுத்துகிறது.
“இந்தியாவில் ஷார்ட்ஸின் பரிசோதனை வடிவின் மூலம் படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்கும், பல்வேறு வீடியோக்களை ஒன்றிணைப்பது, எங்களிடம் இருக்கும் எக்கச்சக்கமான பாடல் பதிவுகளைப் பயன்படுத்துவது, வேகத்தை, நேரத்தைக் கட்டுப்படுத்துவது, கைகளைப் பயன்படுத்தாமல் கவுன்ட் டவுன் மூலம் பயன்படுத்துவது என ஒரு சில புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளோம். இப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சேவை விரைவில் இன்னும் பல நாடுகளிலும், ஐஓஎஸ் பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்படும்” என்று யூடியூபின் ப்ராடக்ட் மேனேஜ்மெண்ட் பிரிவு துணைத் தலைவர் க்ரிஸ் ஜாஃப் கூறியுள்ளார்.
டிக் டாக்கைப் போலவே மேலிருந்து கீழாக ஸ்வைப் செய்து மற்ற வீடியோக்களை அலசும் வசதியும் ஷார்ட்ஸில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் யூடியூபைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 200 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.