Tamilnadu News Update : கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் பொது சுகாதார இயக்குநரகம் நடத்திய 4-வது கட்ட ஆய்வில், தடுப்பூசி போடப்படாத 11 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 68% பேருக்கு கொரோனா தொற்றை ஏற்படுத்தும் எஸ்ஏஆர்எஸ் (SARS-CoV-2) வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி இருந்துள்ளது.
18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படாத நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பில், பல குழந்தைகளில் கண்டறியக்கூடிய அளவு நோய் எதிர்ப்பு சக்தி இருந்தது என்றும், “இவர்கள் இயற்கையான தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர் என்றும் பொது சுகாதார இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று (புதன்கிழமை) வெளியிடப்பட்ட ஆய்வில் தமிழகத்தில் 87 சதவீதம் மக்கள் கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில் (89. 5%) அதிக பாதிப்பு உள்ளது, அதைத் தொடர்ந்து 45-59 வயதுக்குட்பட்டவர்கள் (88. 6%) மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில், 84. 5% பாதிப்பு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில், தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்டறிய அதிகாரிகளுக்கு சில ஆதாரங்கள் உதவியுள்ளது. இந்த ஆய்வில் கணக்கெடுக்கப்பட்ட மொத்த நபர்களில், 27,324 (85%) பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். தடுப்பூசி போடப்பட்ட 10 பேரில் ஒன்பது பேர் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருந்தனர்.
ஆனால் இந்த ஆய்வில் பங்கேற்ற தடுப்பூசி போடப்படாத 4,921 பேரில் 69% பேர் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருந்தனர். இந்த ஆய்வு ஓமிக்ரான் தொற்று மற்றும் கொரோனா மூன்றாவது அலைக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டதால், இந்த ஆய்வு மறுதொற்றை உள்ளடக்காது, என்று இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மற்றொரு ஆய்வின் தரவுகளின்படி, தடுப்பூசி போடாதவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது, சிக்கல்கள் மற்றும் இறப்புகளைக் சந்திப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக வயதானவர்கள் மற்றும் சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற துணை நோய்கள் உள்ளவர்களிடையே நோய் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் 1,076 குழுக்களில் 10 வயதுக்கு மேற்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஒவ்வொரு கிளஸ்டரும் நகர்ப்புற அல்லது கிராமப்புறங்களில் பங்கேற்ற 30 பேரிடம் இருந்து சுகாதார ஊழியர்கள் 5 மில்லி சிரை இரத்தத்தை ஜெல் குழாய்களில் சேரித்தனர்.
இந்த மாதிரிகளை சென்னை, சேலம் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகங்கள் சோதனைக்காக அனுப்பப்பட்டது. இதில் திருவாரூரில் கிட்டத்தட்ட 93% மக்களும், தென்காசியில் 92% மக்களும் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருந்தனர் என்றும்,. பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி, விருதுநகர், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 90% க்கும் அதிகமான மக்களும், திருப்பத்தூர் (82%) மற்றும் காஞ்சிபுரம் (83%) குறைவாக உள்ளது.
இதில் செரோபோசிட்டிவிட்டி மதுரையில் 91% சென்னையில் 88% நேர்மறை மற்றும் கோவையில் 85% உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ “