ஹரியானா மாநிலம் குருகிராமில் செக்டார் 109 பகுதியில் உள்ள 22 தளம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆறு பேர் உள்ளேயே சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குருகிராமில் செக்டார் 109 பகுதியில் சிண்டெல்ஸ் பாரடைசோ அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 22 தளம் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 530 வீடுகள் உள்ளன; 420 குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இந்நிலையில், இன்று மாலை இந்த குடியிருப்பின் ஆறாவது தளம் இடியத் தொடங்கியுள்ளது. அதையடுத்து, கீழே உள்ள நான்கு தளங்களும் ஆட்டம் காணத் தொடங்கின. பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக தளங்கள் இடிந்து விழுந்துள்ளன.
இதனால் 6 பேர் கட்டிடத்துக்குள்ளேயே சிக்கியுள்ளதாகவும், இருவர் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், காவல்துறையினரும், மீட்பு படையினரும் தீவிர மீட்பு பணிகளில் இறங்கியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினரும் வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிகளை ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.