நாமக்கல் நகராட்சியில் உள்ள மொத்தம் உள்ள அனைத்து வார்டுகளிலும், திமுகவை எதிர்த்து காங்கிரஸ் களமிறங்க உள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இதில் 16-வது வார்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது, அந்த வார்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்தது.
இதற்கிடையே, அதே 16வது வார்டில் திமுக வேட்பாளரை அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்தது. இருவரது வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகளால் ஏற்கப்பட்டது. இது கூட்டணிக் கட்சிகளான திமுகவினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 16வது வார்டு மட்டுமல்லாமல் அனைத்து வார்டுகளிலும் திமுகவை எதிர்த்து நிற்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஏ.சித்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் திமுக போட்டியிடுவது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் காங்கிரஸ் தனது சுய அடையாளத்துடன் தேர்தல் பணியாற்றும்” என்று தெரிவித்துள்ளார்.