Udhayanidhi Stalin Trichy election campaign speech: தாய்மார்கள் முடிவெடுத்துட்டா யாரும் மாத்த முடியாது என்றும் நீங்களே பிரச்சாரம் செய்துடுவீங்க என்றும் உதயநிதி ஸ்டாலின் திருச்சி பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
இதில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதில் இன்று திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், இந்த உள்ளாட்சி தேர்தலிலும் 100% வெற்றியை பெற வேண்டும், பண்ணுவீங்களா? தாய்மார்கள் அதிகம் கூடி இருக்கீங்க. தாய்மார்கள் முடிவெடுத்துட்டா யாரும் மாத்த முடியாது. அதுவும் இந்த முறை 50% நீங்களே போட்டி போடுறீங்க. அதனால எங்களுக்கு பெரிய வேலை கிடையாது. பிரச்சாரத்தை நீங்களே பண்ணிடுவீங்க. இருந்தாலும் இந்த 8 மாத கால ஆட்சியின் சாதனைகளை, முதல்வரின் செயல்பாடுகளை உங்களுக்கு நினைவு படுத்தவே நான் வந்துள்ளேன். திமுக ஆட்சி அமைத்தப்போது, கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தது. ஆக்ஸிஜன் பற்றாகுறை, மருத்துவமனை படுக்கைகள் பற்றாக்குறை இருந்தது. அப்போது எல்லா அமைச்சர்களையும் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி, கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற மிக சீரிய முயற்சிகளை முதல்வர் எடுத்தார். இந்தியாவிலேயே கொரோனா உடை அணிந்து, கொரோனா வார்டுக்குள் சென்று, சிகிச்சை நடைமுறைகளை ஆய்வு செய்த ஒரே முதலமைச்சர் நமது தலைவர். என்று திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.