“தி
கிரேட் காளி
” என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படும் பிரபல மல்யுத்த வீரர் தலிப் சிங் ராணா, திடீரென பாஜகவில் இணைந்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் இவர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்துப் பேசினார். டெல்லி அரசு செயல்படும் விதத்தைப் பாராட்டியிருந்தார். இதுகுறித்து கெஜ்ரிவாலும் ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில், பஞ்சாப் தேர்தலை இருவரும் இணைந்து சந்திப்போம் என்றும் கூறியிருந்தார். ஆனால் தற்போது திடீரென ஜகா வாங்கி
பாஜக
பக்கம் வந்திருக்கிறார் காளி.
பஞ்சாப் தேர்தலை மனதில் வைத்து காளியை, தன் பக்கம் இழுத்துள்ளது பாஜக என்பது நினைவிருக்கலாம். பிப்ரவரி 20ம் தேதி பஞ்சாப் சட்டசபைக்குத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் பாஜகவில் இணைந்துள்ளார் காளி.
பாஜகவில் இணைந்தது குறித்து காளி கூறுகையில், பாஜகவில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. பிரதமர்
நரேந்திர மோடி
செய்து வரும் நல்ல காரியங்களால் நாட்டின் சிறந்த பிரதமராக அவர் செயல்படுகிறார். இதனால்தான் நாட்டின் வளர்ச்சிக்காக செயல்படும் பாஜகவில் இணைய முடிவு செய்தேன் என்றார் காளி.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வந்து அக்கட்சியில் இணைந்தார் காளி.
2020ம் ஆண்டு டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர் கிரேட் காளி. அப்போது போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டு மக்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பும், நஷ்டமும் ஏற்படும். சாதாரண மக்களும் கூட இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் காளி கூறியிருந்தார்.
பஞ்சாப் காவல்துறையில் ஆரம்பத்தில் பணியாற்றியவர் காளி. அதன் பின்னர் 2000மாவது ஆண்டு அதிகாரப்பூர்வமாக மல்யுத்தத்தில் இணைந்தார். டபிள்யூ டபிள்யூ இ தொடர்களில் பங்கேற்று பிரபலமானார். டபிள்யூ டபிள்யூ இ சாம்பியன் ஆகி சாதனையும் படைத்தார். சில ஹாலிவுட் படங்களிலும் பாலிவுட் படங்களிலும் காளி நடித்துள்ளார்.