புதுடெல்லி: மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.பியான கே.நவாஸ்கனி உரையாற்றினார். அப்போது அவர், பாஜக, ஆர்எஸ்எஸ் கருத்துக்களை இந்த நாட்டின் கொள்கைகளாக மாற்ற முயல்வது ஆபத்தானது என ஆவேசமாகத் தெரிவித்தார்.
இது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் ராமநாதபுரம் தொகுதி எம்.பி.யும் முஸ்லிம் லீக்கின் மாநிலத் துணைத்தலைவருமான கே.நவாஸ்கனி கூறியதாவது:
பாஜக ஆட்சியில் இருக்கும் கர்நாடக மாநிலத்தில் அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற உரிமையின்படி, ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவியின் மீது வன்மத்தோடு ஒரு கும்பல் கோஷமிட்டு துரத்துகிறது.
இவர்களை யார் தூண்டிவிட்டு குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அரசிற்கு தெரியும். ஒரு முறை, கர்நாடகத்தில் நாட்டினுடைய மூவர்ணக் கொடியை அவமதித்து காவி கொடியை கட்டியவர்கள் மீது இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?
நாட்டின் ஒற்றுமையை யார் குலைக்க முயன்று கொண்டிருக்கிறார்? அறிவார்ந்த பாதையில் செல்ல வேண்டிய மாணவர்களை, யார் வழிதவறி வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்?
மாணவிகள் தங்களுடைய உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள், அதனை தடுக்கும் வண்ணம், தனி ஒரு பெண்ணை வன்மத்தோடு, காட்டுமிராண்டித்தனமாக துரத்தும் கும்பல் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?
ஒரு கல்லூரியில் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை மறுக்கப்படுகிறது. அதற்காக மாணவிகள் போராட தள்ளப்படுகிறார்கள். இப்படி மக்களை போராடுவதற்கு அரசே தள்ளி நாட்டினுடைய அமைதியை கெடுத்து விட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
உரிமைகள் மறுக்கப்படுகின்ற போது மக்கள் உரிமைக்கான குரலை ஜனநாயக வழி போராட்டங்களின் மூலம்தான் முன்னெடுப்பார்கள். ஆளும் ஒரு அரசே ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறது.
இதன்மூலம், மக்களை போராட வைத்து நாட்டினுடைய அமைதியை, ஒற்றுமையை குலைக்கும் செயல்பாடுகளில் ஒரு அரசே ஈடுபட கூடாது. பாஜக தங்களுடைய கருத்துகளை, ஆர்எஸ்எஸ் உடைய கருத்துக்களை இந்த நாட்டினுடைய கருத்துக்களாக மாற்ற நினைப்பது ஆபத்தானது.
பிரதமர் அடுக்கடுக்கான வசனங்களையெல்லாம் பேசினார். பாரதியார் பாடலை எல்லாம் மேற்கோள் காட்டி பேசிய உங்களது பேச்சு சிறப்பு தான்.
ஆனால், இதே பாரதியார் உருவம் அங்கம் வகித்த குடியரசுதின ஊர்தியை தான் நீங்கள் நிராகரிக்கிறீர்கள் என்பதையும் மாண்புமிகு பிரதமர் நினைத்துக் கொள்ள வேண்டும்.
எங்களுடைய வரலாற்றை மறுக்கும் வண்ணம் அல்லது மறைக்கும் வண்ணம் குடியரசு தின அணிவகுப்பில் எங்களுடைய ஊர்தியை நிராகரித்தீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.