கோவா மாநிலத்தில், வரும் 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அன்று ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
கோவா மாநிலத்தில், முதலமைச்சர் பிரமோத் சவாந்த் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மொத்தம் உள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள், வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், வரும் 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, அன்று ஒரு நாள் மட்டும் மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும், தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்றும் மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. தவறும் பட்சத்தில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டு உள்ளதால், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.