பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவது எப்படி?
பிரான்சில் குடியுரிமை பெறுவதற்கு இரண்டு முக்கிய வழிமுறைகள் உள்ளன.
1. நீங்கள் ஐந்து வருடங்கள் பிரான்சில் வாழ்ந்திருந்தால் அதைப் பயன்படுத்தி பிரெஞ்சுக் குடியுரிமை கோரலாம்
நீங்கள் பிரெஞ்சுப் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்றிருந்தால், இரண்டு ஆண்டுகளிலேயே குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த வகையில் குடியுரிமை கோருவோர், தங்களுக்கு B1 levelஇல் பிரெஞ்சு மொழி பேசத் தெரியும் என நிரூபிக்கவேண்டும், பிரான்ஸ், அதன் கலாச்சாரம், வரலாறு மற்றும் அரசியலைக் குறித்து போதுமான அளவு தெரிந்துவைத்திருக்கவேண்டும். அத்துடன், நீங்கள் பிரான்சுடன் ஒன்றிணைந்து வாழ்வதையும் காட்டவேண்டும்.
உங்களுக்கு எந்த குற்றப் பின்னணியும் இருக்கக்கூடாது, சரியாக வரி செலுத்தியிருக்கவேண்டும், தங்களால் தங்களை கவனித்துக்கொள்ளும் அளவுக்கு நிதி வசதி இருப்பதையும் நிரூபிக்கவேண்டும். அதாவது ஒரு வேலை அல்லது வருமானத்துக்கான வழி உள்ளதை நிரூபிக்கவேண்டும்.
2. நீங்கள் பிரான்ஸ் நாட்டவர் ஒருவரை மணந்திருந்தால், அதைப் பயன்படுத்தியும் குடியுரிமை கோரலாம்
நீங்கள் நான்கு ஆண்டுகளாவது பிரான்ஸ் நாட்டவர் ஒருவருடன் வாழ்ந்திருக்கவேண்டும். அதே நேரத்தில் நீங்கள் பிரான்சில் வாழ்ந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.
உங்களுக்கு பிரான்சில் பிறந்த பிள்ளைகள் இருந்தால், அவர்களுக்கு 13 வயதாகும்போது, அவர்கள் சார்பிலும் குடியுரிமை கோரலாம். உங்களுக்கு குடியுரிமை கிடைத்தால், உங்கள் பிள்ளைகளுக்கும் பிரெஞ்சுக் குடியுரிமை கிடைக்கும்.
3. நீங்கள் பிறந்த நேரத்தில், உங்களுக்கு பிரெஞ்சுக் குடிமகனான பெற்றோர் ஒருவராவது இருந்தால் அதைப் பயன்படுத்தியும் பிரெஞ்சுக் குடியுரிமை பெறலாம்.
பிரெஞ்சுக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?
- குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான பூர்த்தி செய்யப்பட்ட இரண்டு நகல்கள்.
- உங்கள் பாஸ்போர்ட்டின் நகல்
- உங்கள் பிறப்புச் சான்றிதழ்
- உங்கள் பெற்றோரின் பிறப்பு அல்லது இறப்புச் சான்றிதழ் மற்றும் திருமண அல்லது விவாகரத்து சான்றிதழ்.
- வாடகை ஒப்பந்தம் அல்லது பிரான்சில் வீடு இருப்பதற்கான ஆதாரம்.
- கடைசி மூன்று முறை வரி செலுத்தியதற்கான ஆதாரம்
- கடந்த மூன்று ஆண்டுகளின் டிசம்பர் மற்றும் ஜனவரி மாத ஊதியம் பெற்றதற்கான ஆதாரம்.
- நீங்கள் B1 level பிரெஞ்சு மொழி கற்றதற்கான சான்றிதழ்.
- திருமணம் வாயிலாக விண்ணப்பிப்போருக்கு திருமண மற்றும் பிறப்பு சான்றிதழ்கள்.
குடியுரிமை பெற எவ்வளவு காலம் பிடிக்கும்?
பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவது எளிதான நடைமுறை அல்ல. சராசரியாக ஒருவர் பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கு 18 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம். அத்துடன், நீங்கள் நாட்டில் எங்கு வாழ்கிறீர்கள் என்பதைப் பொருத்தும் அது மாறுபடும்.
பிரெஞ்சுக் குடியுரிமை பெற எவ்வளவு செலவு பிடிக்கும்?
பிரெஞ்சுக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ கட்டணம் 55 யூரோக்கள்தான். ஆனால், உங்கள் ஆவணங்கள் அனைத்தையும் மொழிபெயர்த்து பதிவு செய்ய அதிகம் செலவு செய்யவேண்டியிருக்கும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.