காந்திய வழியைப் பின்பற்றும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வழிவந்த விக்ரமுக்கு அந்தக் கோட்பாடுகள் நிறைந்த வாழ்க்கை நிறைவைத் தர மறுக்கிறது. தன் 40வது பிறந்தநாளில் அவர் செய்யும் ஒரு காரியம் குடும்பத்தைச் சிதைக்கிறது. பிரிந்து வாழும் விக்ரம், தன் பால்ய நண்பன் பாபி சிம்ஹாவின் உதவியுடன் சாராய சாம்ராஜ்ஜியத்தின் மன்னன் ஆகிறார். வருடங்கள் கழித்து, பிரிந்து சென்ற மகன், மீண்டும் விக்ரமின் வாழ்க்கையில் வர, அது எப்படியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் படத்தின் கதை.
காந்தி மகானாக விக்ரமுக்கு இதில் பல பரிமாணங்கள். அப்பாவி காந்தியவாதி பள்ளி ஆசிரியர், சாராய அதிபர், கேங்ஸ்டர், ஒருவித நடுக்கத்துடன் மகனை அணுகும் வயதான அப்பா என எல்லாவற்றிலும் வாழ்ந்து தள்ளியிருக்கிறார். க்ளைமேக்ஸில் தன் காரை எரித்துவிட்டு, நண்பனின் மனைவியிடம் இருந்து வரும் போன்காலுக்கு அவர் கொடுக்கும் முகபாவங்களும், உடல்மொழியும் குற்றமுள்ள நெஞ்சின் யதார்த்த குறியீடுகள். அதேபோல், முதல் முறையாகத் தேவதூதனாக அவர் சண்டையிடும் அந்த கட் இல்லாத சிங்கிள் டேக் சண்டைக்காட்சி மிரட்டல் ரகம். அதற்காக விக்ரம் கொடுத்திருக்கும் உழைப்பும் அசாத்தியமானது.
விக்ரமுக்கு அடுத்து படத்தில் கவனத்தை ஈர்ப்பது சத்தியவானாக வரும் பாபி சிம்ஹாவும், ராக்கியாக வரும் அவரின் மகன் சனத்தும். பாபி சிம்ஹாவின் கதாபாத்திரம் சந்திக்கும் மனமாற்றங்களை அவர் வெளிப்படுத்தும் விதத்தில் மீண்டும் அந்த ‘அசால்ட் சேது’ நம் கண்முன் வந்து போகிறார். விக்ரமின் அந்த சிங்கிள் டேக் சண்டையின்போது பாபி சிம்ஹா வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியில் ஒரு நடிகராக முதிர்ச்சி காட்டியிருக்கிறார். தாதா என்கிற தாதா பாய் நௌரோஜியின் பாத்திர வார்ப்புக்கு ஏற்றவாறு மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வந்து நின்றிருக்கிறார் துருவ் விக்ரம். சிரிப்பில் மாடுலேஷன், சட்சட்டென மாறும் முகபாவங்களில் ஸ்கோர் செய்தாலும் ஒரு அந்நியத் தன்மையும், பழைய ‘ஆதித்ய வர்மா’வின் உடல்மொழியும் எட்டிப் பார்க்கிறது. சிம்ரனுக்குப் பெரிதாக வேலை இல்லை. வாணி போஜன் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் படத்தில் இடம்பெறவில்லை.
பல காலகட்டங்களில் நகரும் கதைக்கு ஏற்றவாறு உழைத்திருக்கிறது கலை வடிவமைப்பும், ஒளிப்பதிவும். குறிப்பாக ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் வறட்சியான மணல் பரப்புகள்கூட ஒருவித அழகியலுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. தினேஷ் சுப்பராயனின் ஸ்டன்ட் காட்சிகள் அதிரடி சரவெடி. ஆனால், இரண்டு முக்கிய காட்சிகள் தவிரப் படத்தின் மற்ற காட்சிகளுக்கு ஏற்ற பின்னணி இசையைத் தருவதில் சறுக்கியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். பாடல்கள் கதையைத் தொந்தரவு செய்யாதது ஆறுதல்தான் என்றாலும் அவை முணுமுணுக்க வைப்பதாகவும் இல்லையே! என்னாச்சு ச.நா?
எந்தவொரு கொள்கையையும் அதீதமாகக் கடைப்பிடித்தாலோ, திணித்தாலோ அது தவறுதான் என்று படம் சொல்லும் மெசேஜ் ஏற்றுக்கொள்ளும் வகையிலிருந்தாலும், காந்தியவாதிகளைக் காட்சிப்படுத்திய விதத்தில் சற்றே மிகையான விஷயங்கள் எட்டிப்பார்க்கின்றன. இதனாலேயே அவர்கள் மேல் ஒரு தவறான பார்வை வலிந்து திணிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ஓடும் படத்தில் முதல் பாதி மட்டுமே புதிதாகவும், ஈர்க்கும் வகையிலும் இருக்கிறது. குறிப்பாக இடைவேளைக் காட்சி பக்கா தியேட்டர் மெட்டீரியல்! அவ்வளவு எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டு இரண்டாம் பாதி, படத்தில் டயர்டாகும் விக்ரம் போலவே தட்டுத் தடுமாறி நகர்கிறது. நடக்கும் ஆடு – புலி ஆட்டத்திலும் சுவாரஸ்யமோ, ஆச்சரியமோ நமக்கு ஏற்படவில்லை. அதற்கு க்ளைமேக்ஸ் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.
சரியான விகிதத்தில் எமோஷன்களைக் கலந்து ஆட்டத்தில் இன்னும் அனல் பறக்க வைத்திருந்தால் ‘மகான்’ தரிசனம் இன்னமும் மாஸாக இருந்திருக்கும். ஒரு மிகப்பெரிய கம்பேக்கை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கார்த்திக் சுப்புராஜுக்கும், விக்ரமுக்கும் ஓரளவுக்கு மட்டுமே ஆறுதல் அளிக்கிறான் இந்த ‘மகான்’.