புதுடெல்லி: மக்களவையின் திமுக எம்.பி.யான டி.என்.வி.செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை விவாதத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், டெல்லியின் மவுலானா அபுல்கலாம் ஆஸாத் கல்வி நிறுவனத்தின் சிறுபான்மையினருக்கான உதவித்தொகையை ரூ.90 கோடியிலிருந்து வெறும் ரூ.1 லட்சமாகக் குறைத்தது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தருமபுரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யான செந்தில்குமார் பேசியதாவது: கடுமையான தொற்று நோய்க்கு பிறகு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொற்று நோய் விளைவாக பல நபர்கள் வேலை மற்றும் அதனுடன் தொடர்புடைய வருமானத்தை இழந்துள்ளனர்.
கடந்த நான்கு சகாப்தங்களாக இல்லாத வேலையின்மை விகிதம் தற்போது உள்ளது. நிதிநிலை அறிக்கையில் நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கை என்ற பெயரில் சமூக நலத் திட்டங்களுக்கான நிதியை குறைத்துள்ளனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், சுகாதாரம், கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றின் நிதிகளை குறைத்தலில் இருந்து நாம் அறியலாம்.
உணவு மற்றும் விவசாய தேவைக்கான உரமானியம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அரசின் கொள்கை பெரும் பணக்கார நிறுவனங்களுக்கு மட்டும் சாதகமாக உள்ளது.
நடுத்தர வர்க்கத்திற்கு வருமான வரி விதிப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், பெருநிறுவனங்களுக்கானக் கார்ப்பரேட் வரி கூடுதல் கட்டணம் 12 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைத்துள்ளனர்.
மத்திய நிதியமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், அவர்தான் ஏழைகள் பயன்படுத்தும் வைரங்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்து பணக்காரர்கள் பயன்படுத்தும் குடைகள் வரியை ஏற்றி உள்ளார்.
மவுலானா அபுல்கலாம் ஆஸாத் கல்வி நிறுவன அறக்கட்டளைக்கு முந்தைய ஆண்டுகளில் சுமார்ரூ. 70 கோடியில் இருந்து 90 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது வெறும் ஒரு லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த ஏற்றத்தாழ்வு?
ஏனெனில், இந்த நிறுவனத்துக்கு இஸ்லாமியர் பெயர் உள்ளது என்பதாலா? கிட்டத்தட்ட மவுலானா ஆசாத் கல்வி நிறுவனத்தின் உதவித் தொகையை முற்றிலுமாக முடக்கும் செயலை இந்த அரசு செய்திருக்கிறது.
அப்படி என்றால் ஒன்றிய அரசு எத்தகைய மனநிலையில் செயல்படுவது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவோரின் நிலையான மருத்துவ கொடுப்பளவு மாதத்திற்கு வெறும் ஆயிரம் மட்டுமே.
ஆனால், தற்போது மருந்துகள் மற்றும் சிகிச்சையில் நிலவும் விலை உயர்வை கருத்தில் கொண்டால் இந்த தொகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே இத்தகைய மாதத்திற்கு 6000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
ஒரே நாடு ஒரே பதிவு என்பது மீண்டும் மாநிலத்தின் உரிமைகளில் கை வைக்கும் செயலாகும். இவற்றை எங்கள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்திற்கான 8 ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு தொகை தலா ரூபாய் ஆயிரம் ரூபாய் மட்டுமே. ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சாதகமாக உள்ளது.
இது, பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாவும், ஏழைகளை இன்னும் ஏழைகளாக்கவும் மாற்றும். இது, காகிதமில்லா பட்ஜெட் அல்ல இதனுடன் சேர்த்து மக்கள் நலன் இல்லாத பட்ஜெட் ஆகவும் பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் உரையாற்றினார்.