காஞ்சீபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:- நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கவனக்குறைவாக இருந்து விட்டோம். இதனால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே தி.மு.க. வெற்றி பெற்றது. தி.மு.க. ஆமை போல் மெல்ல ஊர்ந்து ஊர்ந்து வெற்றியை பெற்றது.
தி.மு.க. ஆட்சியால் எந்த நன்மையும் மக்களுக்கு கிடைக்கவில்லை. முதலமைச்சர் தன்னை ஒரு விளம்பர பிரியர் ஆக மட்டுமே பார்க்கிறார். மக்களுக்காக எந்த ஒரு பயனும், எதுவும் செய்யவில்லை.
ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களையும் தி.மு.க. அரசு முடக்கி வைத்துள்ளது. அம்மா உணவகம் திட்டம். இந்தியாவில் முன்னோடி திட்டம் என்று அழைக்கப்பட்ட திட்டம் வரலாற்று சாதனை படைத்திட்ட திட்டம் முடக்கப்பட்டுள்ளது.
ஏழைகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதனால் இவை அனைத்தும் முடக்கப்படுகிறது. ஏழைகள் அனைவரும் அ.தி.மு.க.வின் பெயரை சொல்லி வருகிறார்கள். இதுதான் காரணம்.
500க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் தற்போது மருத்துவர்கள் ஆக இருக்கிறார்கள் என்றால் அதற்கு அ.தி.மு.க. தான் காரணம். ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க. மீது தவறான குற்றச்சாட்டை முன் வைக்கிறார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் குலைந்துள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் வீடுகளுக்குச் சென்று காவல் துறை உயர் அதிகாரிகள் மிரட்டுகிறார்கள்.
காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். நடுநிலையோடு செயல்பட வேண்டும், நானும் முதலமைச்சராக இருந்தேன். காவல் துறையை நிர்வகித்தேன். அப்போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது.
நீங்கள் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும்.இல்லாவிட்டால் தி.மு.க. அரசு உங்களைக் காப்பாற்றாது. தி.மு.க. அரசை நம்பி இறங்கினால் உங்களுக்கு என்ன நிலை ஏற்படும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும், கீழே இருக்கிற சக்கரம் மேலே வரும்,அப்படி வரும் போது ஜனநாயகத்துக்கு புறம்பாக எந்த காவல்துறை அதிகாரியும் அரசு அதிகாரியும் செயல்பட்டால் நிச்சயம் அதற்குண்டான பலனை அடைவார்கள்.
நான் இப்போது இருக்கின்ற பொம்மை முதல்-அமைச்சர் போல் இருக்க மாட்டேன். எந்தக் காரியம் ஆனாலும் துணிச்சலோடு முடிவு எடுப்பேன். எனவே காவல்துறை அதிகாரியாக இருக்கட்டும், அரசு அதிகாரியாக இருக்கட்டும் நேர்மையுடன் செயல்படுங்கள்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், நிர்வாகிகள் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், பாலாஜி, ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.