CM Stalin erode election campaign speech: தமிழகத்தில் யாருடைய ஆட்சியில் நீட் தேர்வு வந்தது என்பது குறித்து விவாதிக்க தயாரா என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 8 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
இந்தநிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், சென்னையிலிருந்து காணொலி வாயிலாக ஓவ்வொரு மாவட்ட திமுக வேட்பாளர்களையும் ஆதரித்து பேசி வருகிறார். அந்த வகையில் இன்று ஈரோடு மாவட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “திமுக தேர்தலுக்காக உருவான கட்சி அல்ல. தமிழ்நாட்டை இந்தியாவின் சிறந்த மாநிலமாக மாற்ற திமுக உழைத்து வருகிறது. ஆட்சியின் நலத் திட்டங்கள் மக்களுக்குச் சென்றடைய உள்ளாட்சியிலும் திமுக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உள்ளாட்சிகளில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டால், நலத்திட்டங்களை முறையாக மக்களிடம் எடுத்துச் செல்லாமல், அதை வைத்து அரசியல் செய்வார்கள்.
எடப்பாடி பழனிசாமிக்குப் பொய் சொல்வது கை வந்த கலையாக மாறிவிட்டது. பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற முயன்றது யார்? பொள்ளாச்சி சம்பவம், கோடநாடு வழக்கு, நீட் வழக்கு என அனைத்திலும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். இப்படி தொடர்ச்சியாகப் பொய்களைச் சொல்லி வருவதால் பொதுமக்கள் அவரை பச்சைப் பொய் பழனிசாமி என்றே அழைக்கின்றனர்.
தினம் ஒரு தகவல் என்பது போலத் தினம் ஒரு பொய்யை எடப்பாடி பழனிசாமி சொல்லி வருகிறார். திமுக ஆட்சியில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆட்சிக்கு வந்த உடன், கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம், முதலமைச்சர் காப்பீடு, பொதுமக்கள் கோரிக்கைக்கு 100 நாள் குறைதீர்ப்பு உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டு வந்தோம். ஆனால் சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தைப் படித்த எடப்பாடி பழனிசாமி, செய்தித்தாள்களைக் கூட படிக்க முடியாமல், தினமும் பொய்களைச் சொல்லி வருகிறார்.
நீட் தேர்வு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார்கள். நீட் தேர்வைக் கொண்டு வந்ததே திமுக- காங்கிரஸ் தான் எனப் பொய் சொல்கிறார்கள். நீட் தேர்வு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே அமலுக்கு வந்தது. திமுக ஆட்சியில் இருந்த வரை தமிழ்நாட்டில் ஒரு இடத்திலும் நீட் தேர்வு நடக்கவில்லை. அவ்வளவு ஏன் ஜெயலலிதா இருந்த வரை கூட நீட் தேர்வு நடைபெறவில்லை. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு வந்த பின்னர் தான் தமிழ்நாட்டில் நீட் தேர்வு அமலுக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி நீட் விவகாரத்தில் ஆளுநர் மற்றும் பாஜக அரசிடம் கேட்கப் பதுங்கியதால் தான் கடந்த 4 ஆண்டுகளாக நீட் தேர்வு நடக்கிறது. சொல்லப் போனால் நீட் தேர்வு செல்லாது என திமுக தொடர்ந்த வழக்கில் தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு அதிமுக ஆட்சியில்தான் வந்தது. இதை ஆதாரங்களுடன் நிரூபிக்க நான் தயார். நீட் தேர்வு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விவாதிக்க தயாரா? அதிமுக ஆட்சியில் இருந்த போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலேயே நாம் 60% இடங்களை வென்றோம். இந்த முறையும் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெல்ல வேண்டும்”. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.