யார் நலனில் அக்கறை கொள்கிறது ஒன்றிய அரசு? – மதுரை எம்பி. சு.வெங்கடேசன் கேள்வி

35 சதவிகித பங்குகள் வைத்திருந்தாலும் உரிமையாளராக முடியாத ஒன்றிய அரசு, சிறு தொழில்களை காக்க நிதியில்லை என்பது நியாயமா? யார் நலனில் அக்கறை கொள்கிறது அரசு? என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து சு. வெங்கடேசன் கூறியபோது, ’’தனியார் தொலைதொடர்புத் துறை நிறுவனங்கள் வைத்திருக்கிற பாக்கி, அதற்கு தரப்பட்டுள்ள தவணை காலம், பங்குகளாக மாற்றிக்கொள்ள அரசு கொடுத்த வாய்ப்பு குறித்து அவையில் கேள்வி எழுப்பி இருந்தேன்.
அதற்கு பதில் அளித்துள்ள தகவல் தொடர்பு இணை அமைச்சர் தேவுசிங்க் சவுகான், வோடா போன் (2,02,257 கோடி), பாரதி ஏர்டெல் (1,01.828. 75 கோடி), ரிலையன்ஸ் ஜியோ (73,958 கோடி) என இன்னும் ஸ்பெக்ட்ரம் பாக்கி மொத்தம் சுமார் 3,78,000 கோடி ஆக உள்ளது எனவும், இதற்கான தவணைக் காலம் 15 ஆண்டுகள், அதாவது 2039 ஆம் ஆண்டு வரை தரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதுதவிர ஏ.ஜி.ஆர் பாக்கி (Annual Gross Revenue) 7 நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ 89,146 கோடிகள் உள்ளன.
image
இந்த பாக்கிகள் மீதான வட்டி பாக்கியை நிறுவன பங்குகளாக தரலாம் என்ற வாய்ப்பை அரசு கொடுத்து இருந்தது. நீதிமன்றம் நிர்ணயித்த காலத்திற்கும் மேலாக ஸ்பெக்ட்ரம் பாக்கிக்கு 4 ஆண்டு தவணை நிறுத்தமும், சிறு கூடுதல் வட்டியோடு தரப்பட்டது. பங்குகளாக மாற்றுகிற வாய்ப்பை வோடாபோன், டாடா டெலிசர்வீசஸ், டாடா டெலி மகாராஷ்டிரா சர்வீசஸ் ஆகியன பயன்படுத்திக் கொண்டுள்ளன என்றும் அவர் பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும், மறுப்பக்கம் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட 2% வட்டிச் சலுகைத் திட்டத்திற்கு (Interest Subvention scheme) அரசு வங்கிகளுக்கு தர வேண்டிய மானியத்தை ஆரவாரமே இல்லாமல் அனுப்பாமல் நிறுத்திக்கொண்டது ஒன்றிய அரசு. ஆனால் பெரும் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு இவ்வளவு பெரிய தொகை, அதவாது ரூ 3,78,000 கோடிக்கு 15 ஆண்டுகாலம் தவணை நீட்டிப்பு என்றால் எவ்வளவு பாசம்.
image
வட்டி பாக்கியை பங்குகளாக மாற்றியதிலேயே சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் 35 சதவீத பங்குகள் அரசின் கைகளுக்கு வந்துவிட்டது. அசலுக்கு என்ன செய்வது? 35 சதவீத பங்குகளை வாங்கி அரசு முதன்மை பங்குதாரராக மாறியும் நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டிற்கு வரவில்லை. பிர்லாவின் கைகளிலேயே தொடர்ந்து இருப்பதற்கு விதிகளை திருத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. 16,000 கோடி ரூபாய் நடவடிக்கை எப்படி அரங்கேறி உள்ளது பாருங்கள்’’ என அவர் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.