ரஷ்யாவில் உள்ள எக்டேரின்புர்க் நகரில் உள்ள எல்ஸ்ட்டின் மைய்ய கலை அரங்கில் பழமையான ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தது.
1932 வாக்கில் ஹன்னா லெபோர்ஸ்கயா வரைந்த ‘த்ரீ பிகர்ஸ்’ என்ற ஓவியமும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
கண்ணில்லாத இந்த ஓவியத்தில் கண் வரைந்ததைக் கண்டு திடுக்கிட்ட பார்வையாளர் ஒருவர் இதுகுறித்து நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தார்.
விசாரணையில் அன்றைய தினம் புதிதாக வேலைக்கு சேர்ந்த பாதுகாவலர் ஒருவர் பொழுது போகாததால் தனது கையில் இருந்த பேனாவால் இந்த ஓவியத்தில் கண் வரைந்த விவகாரம் தெரியவந்தது.
இந்த சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றதாக தெரிகிறது, ஓவியத்தை சேதம் செய்த பாதுகாவலரின் விவரம் வெளியிடப்படவில்லை என்ற போதும் 60 வயது மதிக்கத் தக்கவர் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்திய மதிப்பில் சுமார் 7.5 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த ஓவியத்தில் இருந்த கரை நீக்கப்பட்டு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஓவியத்தை மீட்டெடுக்க சுமார் 2.5 லட்சம் ரூபாய் செலவானதாக கூறப்படுகிறது.
ஓவியத்தை சேதம் செய்த பாதுகாவலர் அன்றைய தினமே வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது அவர் மீது பொது சொத்தை சேதம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு அவருக்கு சுமார் 40,000 ரூபாய் அபராதத்துடன் ஓராண்டு தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.