இந்தியா முழுவதும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தலைநகர் டெல்லியில் அலுவலகம் கட்டிக்கொள்ள இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் சொந்தமாக அந்த இடங்களில் அலுவலகம் கட்டி 3 ஆண்டுகளில் அரசு கட்டடங்களை காலி செய்ய வேண்டும் என்பது விதிமுறை.
அந்த வகையில், கடந்த 2020-ல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவின் டெல்லி குடியிருப்பை ஒரு மாத காலத்துக்குள் காலி செய்ய வேண்டும் என மத்திய அரசு அவருக்கு வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. பின்னர் இது தொடர்பாக சமூக ஆர்வலர் சுஜித் படேல் என்பவர், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்திடம் விவரம் கேட்டு ஆர்.டி.ஐ மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், சுஜித் படேல் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ-க்கு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் பதிலளித்திருக்கிறது.
அதில், காங்கிரஸ் கட்சி அரசுக்கு ரூ.12,69,902 வாடகை பாக்கி நிலுவையில் வைத்திருப்பது தெரியவந்திருக்கிறது.
டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள சோனியா காந்தியின் வீட்டிற்கு ரூ.4,610 வாடகை நிலுவையில் உள்ளதாகவும், அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு ரூ.12,69,902 வாடகை நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சோனியா காந்தியின் தனிப்பட்ட செயலாளரான வின்சென்ட் ஜார்ஜ், புதுடெல்லி சாணக்யபுரியில் உள்ள பங்களாவிற்கு வாடகை பாக்கி ரூ.5,07,911 நிலுவையில் வைத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், பா.ஜ.க நிர்வாகி தஜிந்தர் பால் சிங் பக்கா என்பவர், “பதவியில் இல்லாததால் சோனியா காந்தியால் மோசடி செய்ய இயலவில்லை. அரசியல் வேறுபாட்டைக் கடந்து ஒரு மனிதனாக அவருக்கு நான் உதவ விரும்புகிறேன்” என்று ட்விட்டரில் கிண்டலாக பதிவிட்டிருக்கிறார்.