பெங்களூரு-பெங்களூரில் சுமுகமான போக்குவரத்துக்காக துவங்கப்பட்ட ‘ஒயிட் டாப்பிங்’ பணிகள், பல இடையூறுகளுக்கு பின், இறுதி கட்டத்தை எட்டியதால், வாகன பயணியர் நிம்மதியடைந்துள்ளனர். எனினும், இன்னும் மூன்று மாதங்களில் தான் பணிகள் முடியுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பெங்களூரின் இருதய பகுதிகள், போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடங்களில், சாலைகள் பள்ளம் ஏற்பட்டிருந்ததால், வாகன பயணியர் அவதிப்பட்டனர். விபத்துகளும் நடந்தன. இதற்கு தீர்வு காணும் நோக்கில், 2018ல் ஒயிட் டாப்பிங் பணிகள் துவங்கப்பட்டது. இதன்படி, சாலை மீது சிமென்ட் காங்கிரீட் கலவை பூசப்பட்டது.பணிகள் தாமதமானதால், பாதசாரிகள், பொது மக்கள் அவதிப்பட்டனர். விரைவில் பணிகளை முடிக்கும்படி வலியுறுத்தினர். தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மூன்று மாதங்களில் சாலைகள், மக்களின் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்புள்ளது.இது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:இதில், 152 கி.மீ.,க்கு சாலைகளில், ஒயிட் டாப்பிங் பணிகள் நடக்கின்றன. இதுவரை 103 கி.மீ.,க்கு பணிகள் முடிவடைந்துள்ளன. மூன்று மாதங்களில் முடிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஒயிட் டாப்பிங் பணிகள் என்பதால், அடுத்த 20 — 30 ஆண்டுகள் சாலைகள் தரமாக இருக்கும்; எந்த பிரச்னையும் ஏற்படாது. அவ்வப்போது பழுது பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. முதல்வரின் நகர அபிவிருத்தி திட்டத்தின் நிதி பயன்படுத்தப்படுகிறது.நகரின் பிரதான சாலைகளில், 100 சாலைகள் ஒயிட் டாப்பிங் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டது. இவைகள் படிப்படியாக தரம் உயர்த்தப்படுகிறது.மழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது, தார் பெயர்ந்து வருவது, சாலை பள்ளங்கள் போன்ற பிரச்னைகளுக்கு, ஒயிட் டாப்பிங் நிரந்தர தீர்வாக இருக்கும். பணிகள் முடிவடைந்தால், நகரின் போக்குவரத்து நெருக்கடிக்கும் தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement