cricket Tamil News: ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் சுற்றுப்பயணம் செய்திருந்த இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில், அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் களமிறங்கிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, முதல் இன்னிங்சில் 244 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன்பிறகு நடந்த 2வது இன்னிங்சில் 36 ரன்னில் இந்தியா சுருண்டது. தொடர்ந்து வந்த ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 93 ரன்கள் சேர்த்தது. இதன்முலம் அந்த அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சொந்த விடுப்பு காரணமாக நாடு திரும்பியதால் மீதமிருந்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை துணைக்கேப்டன் அஜிங்க்யா ரஹானே வழிநடத்தினார். இவரது தலையிலான அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு, ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடியும் கொடுத்தது. மேலும், அந்த அணிக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
இந்த அசத்தலான வெற்றி மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியையும் இந்திய அணி பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு வித்திட்ட இந்திய வீரர்களையும், கேப்டனாக இருந்த ரஹானேவையும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் என அனைவரும் கொண்டாடி தீர்த்தனர்.
ரஹானே கருத்து
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்று ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், 3 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட அஜிங்க்யா ரஹானே, அந்த அனுபவம் குறித்து பிரபல ஸ்போர்ட்ஸ் செய்தியாளர் போரியா மஜும்தாரின் யூடியூப் சேனலில் சமீபத்தில் பகிர்ந்து இருந்தார். அதில் அவர், தான் எடுத்த முடிவுகளுக்கு வேறு ஒருவர் பெருமை (கிரெடிட் எடுத்துக்கொள்கிறார்) பெற்றுக்கொண்டார். அதைக் கண்டு தான் மகிழ்ச்சியடையவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
“மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்சிஜி) நடந்த இரண்டாவது டெஸ்டில் தொடக்க நாளின் முதல் செசனில் ரவிச்சந்திரன் அஷ்வினை ஒன்பதாவது ஓவரில் கொண்டு வந்தது முற்றிலும் இயல்பானது. அது நன்றாக வேலை செய்தது. அஸ்வினின் இரண்டு ஓவரில் மேத்யூ வேட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் அவுட் ஆனார்கள்.
அதற்குப் பிறகு ஆட்டம் முழுவதுமாக எங்களுக்குச் சாதகமாக மாற்றியது என்று நான் கூறமாட்டேன். ஆனால், அஸ்வினை அழைத்து பந்து வீச சொன்னது முற்றிலும் உள்ளுணர்வின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். விக்கெட் ஈரமாக இருந்தது. முதல் மூன்று-நான்கு ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய பிறகு நான் அதை உணர்ந்தேன். எனவே, நான் அஸ்வினை பயன்படுத்த நினைத்தேன். அதற்கான நேரமும் சரியாக கைகூடியது.
அங்கே நான் என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியும், நான் யாரிடமும் சொல்ல வேண்டியதில்லை. அதற்காக பெருமைப் பட்டுக்கொள்வதும் என் இயல்பு அல்ல. ஆம், சில விஷயங்கள் நான் களத்திலோ டிரஸ்ஸிங் ரூமிலோ எடுத்தேன், ஆனால் வேறு யாரோ ஒருவர் அதற்கான கிரெடிட்டைப் பெற்றார்.
எனக்கு முக்கியமானது என்னவென்றால், நாங்கள் தொடரை வென்றோம். அது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர், அது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது,” என்று ரஹானே கூறியிருந்தார்.
ரஹானே இவ்வாறு ஒருவரை குறிப்பிட்டு பேசியது, முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியைத் தான் என்று பேசப்பட்டது. அவரின் இந்த கருத்து இந்திய கிரிக்கெட்டில் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. மேலும், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
அஸ்வின் கருத்து
இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடர் குறித்து சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கூறிய பழைய கருத்து ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வெற்றிக்குப் பிறகு பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதருடன் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் அஸ்வின், தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் முடிவை பாராட்டி பேசியிருந்தார்.
“ரவி சாஸ்திரி டிரஸ்ஸிங் அறைக்குள் வந்து, ஆஸ்ஷ்ஹ்ஹ்ஹ், முதல் 10 ஓவர்களில் பந்து வீசுங்கள் என்று கூறினார். அப்போதுதான் நான் எனது உடையை அணிந்து கொண்டிருந்தேன். மெல்போர்னில் அவர் முதல் 10 ஓவர்களில் என்னை பந்து வீச சொன்னது எனக்கு ஆச்சரியம் அளித்தது.
ஆடுகளம் ஈரமாக இருக்கலாம், அது சுழலுக்கு ஒத்துழைக்கக்கூடும் என்று நான் ஜிங்க்ஸிடம் (ரஹானே) கூறியுள்ளேன் என்று சொன்னார். பும்ரா சிறப்பாக பந்து வீசினார். பின்னர் ஜிங்க்ஸ் எனக்கு பந்தை கொடுத்தார், நான் வீசிய முதல் பந்தில் அது நிறைய சுழன்று பவுன்ஸ் ஆனது. நான் வாவ் என்பது போல் இருந்தேன்,” என்று அஸ்வின் பேசியிருந்தார்.
இந்த இரு வீரர்களும் வீடியோவில் பேசியிருப்பது ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ள நிலையில், இரண்டு வீடியோவையும் இணைத்து ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
Who is lying, Ashwin or Rahane?
(Watch full video) pic.twitter.com/1ndQLG2wZD— Sid Nanda 🇮🇳 (@sid_2893) February 10, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“