புதுடெல்லி: அமெரிக்கா உட்பட 72 நாடுகளில் இருந்து வருவோருக்கு இனி 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் 14-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
கரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு அவ்வப்போது விதித்து வருகிறது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் சில நாடுகளில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் பரவியது. இதையடுத்து, ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்ட சில நாடுகளை இடர்பாடு உள்ள நாடுகள் என மத்திய அரசு வகைப்படுத்தியது. அந்தநாடுகளில் இருந்து வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக 7 நாட்கள்வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.
இப்போது, நாட்டில் கரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இதையடுத்து, மத்திய சுகாதார அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது வரும் 14-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதில் கூறியிருப்பதாவது:
ஒமைக்ரான் இடர்பாடு உள்ள நாடுகள் பட்டியல் ரத்து செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வர விரும்புவோர், ‘ஏர் சுவிதா’ என்ற இணையதளத்தில் 14 நாட்களின் பயண விவரம் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்யவேண்டும். பயண நாளுக்கு முன்னதாக 72 மணி நேரத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட கரோனா இல்லை என்பதற்கான ஆர்டிபிசிஆர் சோதனை அறிக்கையை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதற்கு மாற்றாக 2 டோஸ்தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்யலாம். இந்தியாவுடன் பரஸ்பரம் கரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ள கனடா, ஹாங்காங், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 72 நாடுகளில் இருந்து வருவோருக்கு மட்டுமே இது பொருந்தும்.
இதைச் செய்தால் மட்டுமே, வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் பயணிகளை விமானத்தில் அமர விமான நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும். கரோனா தொற்று இல்லாத பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும்.
இந்தியா வந்தடைந்ததும் கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்படும் பயணிகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதேநேரம், 14 நாட்களுக்கு பயணிகள் தாங்களே கண்காணித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
– பிடிஐ