இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசு முறை பயணமாக கடந்த 3-ம் தேதி முதல் 6 வரை சீனா சென்றார். அங்கு பிஜீங் குளிர்கால ஒலிம்பிக் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக இம்ரான்கான் பங்கேற்றார்.
சீன பயணத்தின் போது இம்ரான்கான் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, அவரிடம் அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான உறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இம்ரான்கான், தேவைப்படும்போது அமெரிக்கா பாகிஸ்தானுடன் உறவை ஏற்படுத்துகிறது. இதனால், ரஷியாவுக்கு பாகிஸ்தான் எதிரியாகிறது.
தங்கள் நோக்கங்கள் நிறைவேறியவுடன் அமெரிக்கா எங்களை கைவிட்டுவிட்டு எங்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்கிறது. 1980-ம் ஆண்டுவாக்கில் அமெரிக்கா எங்களுக்கு உதவியது. ஆனால், ஆப்கானிஸ்தானை விட்டு ரஷியா வெளியேறிய உடன் அமெரிக்கா பாகிஸ்தான் மீது பொருளாதார தடைகளை விதித்தது.
அதேவேளை, சீனா எங்கள் நண்பன். சீனா எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே உள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் இருநாடுகளும் (பாகிஸ்தான் – சீனா) பல்வேறு கட்டங்களில் உறுதுணையாக இருந்துள்ளோம். பல்வேறு காலகட்டங்களில் நண்பன் சீனா பாகிஸ்தானுக்கு துணையாக நின்றுள்ளது’ என்றார்.