ஆடைக்கு மேல் தொட்டால் பாலியல் சீண்டல் இல்லை: சர்ச்சை நீதிபதி ராஜினாமா!

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை கடந்த ஜனவரி 19ஆம் தேதி தீ்ர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை நீதிபதி
புஷ்பா வி கன்டேவாலா
வழங்கினார்.

அதில், குற்றம் சாட்டப்பட்ட நபர் சிறுமியின் ஆடைகளை கழற்றாமல் அவரின் உடலை சீண்டி உள்ளார். எனவே இது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுக்கும் போக்சோ சட்டத்தின்கீழ் குற்றமாகாது. உடல் ரீதியான தொடர்பு இல்லாததால் போக்சோ சட்டத்தின் கீழ் கருதப்படாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ சட்டப் பிரிவையும் நீதிபதி புஷ்பா வி கன்டேவாலா ரத்து செய்தார்.

நாடு முழுவதும் இவர் வழங்கிய தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், தேசிய மகளிர் ஆணையம் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

இதனையடுத்து, இந்த வழக்கிலிருந்து குற்றவாளியை விடுவித்த மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. தொடர்ந்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், போக்சோ நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டு சிறை, 5 ஆண்டு கடும் சிறை தண்டனையை ஏக காலத்தில் குற்றவாளி அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

அதன் தொடர்ச்சியாக, போக்சோ வழக்கில் தீர்ப்பு வழங்கிய மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நீதிபதி புஷ்பா வி கன்டேவாலாவை மாவட்ட நீதிபதியாக தரம் இறக்கி கொலிஜியம் பரிந்துரைத்தது. இவர் தனது பதவிக் காலம் முடியும் வரை அதாவது 2022ஆம் ஆண்டு பிப்ரவரி வரை மாவட்ட நீதிபதியாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

அடுமட்டும் அல்லாமல் நீதிபதி கான்டேவாலாவுக்கு 2 ஆண்டுகள் பதவிக்காலம் நீட்டிப்பு செய்து தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் கடந்த 2020ஆம் ஆண்டு பரிந்துரை செய்திருந்தது. அதை ஓர் ஆண்டாகவும் கொலிஜியம் குறைத்தது.

இந்த நிலையில், ஆடைக்குமேல் தொடுவது
பாலியல் சீண்டல்
இல்லை என்று சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கிய மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா வி கன்டேவாலா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். கூடுதல் நீதிபதியாக இருந்த கன்டேவாலாவின் பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அவர் ராஜினாமா செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.