புதுடெல்லி: ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக, டெல்லி பல்கலைக்கழகத்தில் 4 தமிழ்ப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
டெல்லி பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ் மொழியில் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை மற்றும் உயர்க் கல்வி ஆகியவை போதிக்கப்படுகின்றன. தமிழ்த் துறையில் 5-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் ஓய்வு பெற்றும் அப்பணியிடங்கள் 10 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. இதுகுறித்த செய்தி தொடர்ந்து ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியாகி வருகிறது. கடைசியாக கடந்த டிசம்பர் 20-ம் தேதி வெளியான இந்து தமிழ் நாளிதழ் செய்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்களின் நேரடி கவனத்துக்கு சென்றுள்ளது.
இதையடுத்து, டெல்லி பல்கலை தமிழ்ப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வலி யுறுத்தி, மத்திய கல்வித் துறைஅமைச்சகத்துக்கு தமிழக தலைவர்கள் கடிதங்கள் எழுதினர். இதன் எதிரொலியாக 4 பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதில், டெல்லி பல்கலை தமிழ்ப் பிரிவிற்கு ஒரு பேராசிரியர் மற்றும் 3 இணை பேராசிரியர்கள் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க கோரப்பட்டுள்ளது. எனினும், டெல்லி பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தமிழ்ப் பிரிவுகள் மூடல்
டெல்லி பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற 2 மகளிர் கல்லூரி களில் தமிழ்ப் பேராசிரியர் பணியிடங்கள் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த 2 பணியிடங்களும் வேறு மொழி களுக்கு மாற்றப்பட்டு விட்டதால் தமிழ்ப் பிரிவுகள் மூடப்பட்டு விட்டன. ‘லேடி ராம்’ கல்லூரியில் 20 ஆண்டுகளுக்கு முன்பும், ‘மிராண்டா ஹவுஸ்’ கல்லூரியில் 10 ஆண்டுகளுக்கு முன்பும் தமிழ்ப் பேராசிரியர்கள் ஓய்வு பெற்றனர். டெல்லி பல்கலை.யின் கீழ் இயங்கும் தயாள் சிங் கல்லூரியிலும் 4 ஆண்டுகளாக நிரந்தர பேராசிரியர் நியமிக்கப்படவில்லை. டெல்லி பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவாக செயல்படும் திறந்தவெளி பிரிவின் ஒரே ஒரு தமிழ் பேராசிரியர் இந்த மாதம் ஓய்வு பெற உள்ளார். அந்த பணியிடத்தின் நிலையும் கேள்விக்குறியாக உள்ளது.
கடந்த 1947-ல் தொடங்கப்பட்ட மத்திய அரசின் ஆசிரியர் கல்வியியல் நிறுவனத்தில் ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இவர்களில் தமிழுக்கான 7 மாணவர்களின் கல்வியியல் பிரிவும் 2016 முதல் மூடப்பட்டிருக்கிறது. இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய கல்வித் துறை அமைச்சகம் மவுனம் காப்பதாக தமிழறிஞர்கள் கவலைப்படுகின்றனர்.
தமிழக தலைமைச் செயலாளர் வே.இறையன்பு உத்தரவின் பேரில், டெல்லி தமிழ்நாடு இல்ல அதிகாரிகளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கைக்கான ஆலோசனை கூட்டம், இன்று 11-ம்தேதி டெல்லி தமிழ்நாடு இல்லத்தில்நடைபெறுகிறது. கூட்டத்தில் தமிழ்ப் பிரிவு, தமிழ்ப் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக விவாதித்து உயர் அதிகாரிகள் அறிக்கை அனுப்ப உள்ளனர். அதன் அடிப்படையில் தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.