உலகிலேயே 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய சொத்துக்களை வைத்திருக்கும் முதல் நபராக அமேசான் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெஸோஸ் உருவெடுத்துள்ளார்.
அமேசான் நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்ததால் பெஸோசின் சொத்து மதிப்பு 4.9 பில்லியன் டாலர்கள் உயர்ந்து 200 பில்லியன் டாலர்களைக் கடந்தது. அமேசான் தவிர பெஸோஸ் வசம் ப்ளூ ஆரிஜின் என்கிற விண்வெளி ஆய்வு கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனமும், வாஷிங்கடன் போஸ்ட் பத்திரிகையும் உள்ளன. இன்னும் சில தனியார் முதலீடுகளையும் செய்துள்ளார்.
ஆனால் அமேசான் நிறுவனத்தில் அவருக்கு இருக்கும் 11 சதவீத பங்குகள் மட்டுமே. அவரது பிரம்மாண்டமான சொத்தில் 90 சதவீதம் உள்ளது. கோவிட்-19 நெருக்கடி சூழல் ஆரம்பித்ததிலிருந்தே அமேசான் சேவைகளுக்கு மக்களிடையே அதிக தேவை உருவாகியது. இந்த வருடத்தின் ஆரம்பம் முதலே அமேசானின் பங்கு மதிப்பு ஏற்றம் கண்டு வருகிறது. ஜனவரி 1 2020 அன்று பெஸோஸின்சொத்து மதிப்பு 115 பில்லியன் டாலர்கள் என்ற நிலையில் இருந்தது.
புதன்கிழமை இந்த மதிப்பு 204.6 பில்லியன் டாலர்கள் என்ற நிலையில் இருந்தது. ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டக்ஸ் என்கிற உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பெஸோஸின் சொத்து மதிப்பு 202 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போதைக்கு பெஸோஸுக்கு அருகிலிருக்கும் அடுத்த பணக்காரர் மைக்ரோசாஃப்டின் இணை நிறுவனர் பில்கேட்ஸ். பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் இவரது சொத்து மதிப்பு 124 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.