"எங்க அப்பா திராவிடம் திராவிடம்னு சொல்லி குடும்பம் அழிஞ்சதுதான் மிச்சம்" – நடிகர் ராதாரவி

தென்னிந்திய சினிமாவில் பொன்விழா காணுகிறார் ராதாரவி. நடிக்க வந்து 48 வருடங்கள் ஆகிறது. இதுவரை நானூறு படங்களுக்கு மேல் நடித்தவர். வில்லன் நடிகராக உச்சம் தொட்டவர். குணச்சித்திரம், காமெடிகளில் கெத்து காட்டுபவர்… அரசியலிலும் அதிரடி அதிர்வேட்டு கருத்துக்களை அள்ளி வீசுபவர். நடிகர் சங்கம் உள்பட பல சங்கங்களிலும் கோலோச்சிய ராதாரவியிடம் பேசினோம்.

“நிறைய சின்னப் படங்களோட விழாக்கள்லையும் உங்களைப் பார்க்க முடியுதே?”

”நல்ல விஷயம்தானே கண்ணு! ஓடுனவன் காலு நிக்காது. வீட்ல சும்மா உட்கார முடியாது. துறுதுறுனு இருந்துட்டே இருக்கும். அதனால எதாவது ஒரு படத்துக்கு கூப்பிட்டாகூட அதுல போய் நடிக்கறேன். ஆனாலும் என் கேரக்டர் கேட்டபிறகுதான் நடிக்கறேன். இன்னிக்கு ஒரு சின்னப் பட்ஜெட் படம் இருக்குது. பேசப்போறோம்னு என் டைரியில எழுதி வச்சிருந்தால், அந்தப் படத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பேன். ஏன்னா, சின்னப் படம்னா நாம பெரிய புரொமோஷன் கொடுக்கணும். அந்தப் படங்கள் நல்லா ஓடணும். இப்ப யூடியூப் சேனல்கள் நிறைய வந்திடுச்சு. அதெல்லாம் சப்போர்ட் பண்ணணும். தியேட்டர்ல சின்னப் படங்கள் ஓட மாட்டேங்குது. எனவே அந்தப் படங்களை ஓட்டணும். அதுக்கு நாம சப்போர்ட் பண்ணனும் என்கிற மைன்ட் செட்லதான் விழாவுக்கே வருவேன். அதுல நான் ஃப்ளோல பேசினாலும், மைன்ட்ல ஒருமுறைக்கு ரெண்டு முறை யோசிச்ச பிறகுதான் பேசுவேன். அதே சமயம் பேசினதுல எதாவது தவறு இருந்தாக்கூட முதல் வேலையா மன்னிப்பு கேட்கவும் ரெடியா இருப்பேன்.”

ராதாரவி

“உங்களைப் பத்தி சொல்லும்போது அப்பா திராவிட இயக்கத்தில் திளைத்தவர். ஆனா, நீங்க பா.ஜ.க.வுல இருக்கீங்கனு ஒரு விமர்சனம் இருக்கே?”

”அதை விமர்சனமா எடுத்துக்கவேகூடாது. திராவிட சிந்தனைகள் சித்தாங்கள்ல இருக்கறவங்களுக்கு என்னைப் பார்த்தா எதிர்ப்பா தெரியும். ஆனா, பா.ஜ.க.வில என்னை நட்பாகத்தானே பார்க்கறாங்க. நான் தி.மு.க. மீட்டிங்ல பேசும்போது திமுக ஆளுங்க கைத்தட்டுவாங்க. அ.தி.மு.க. மீட்டிங்ல பேசும்போது அவங்க கைத்தட்டுவாங்க. அதனால அதை பெரிய விஷயமா எடுத்துக்க முடியாது. ‘இவர் திராவிட சித்தாந்தம்.. இவர் எப்படி?’னு சொன்னா.. போகக்கூடாதுனு சட்டம் இருக்குதா என்ன! அரச மரத்துல மாங்காய் வந்திருக்கு. i will show the proof. ஆதாரம் வச்சிருக்கேன். ஆச்சரியமா இருக்கு. அதனால இப்படி ஒருத்தர் இருக்கறதுல தப்புகிடையாதே! எங்க அப்பா திராவிடம் திராவிடம்னு சொல்லி குடும்பம் அழிஞ்சதுதான் மிச்சம். அவர் அமைதியா அதெல்லாம் இல்லாமல் இருந்திருந்தார்னா ‘சிறந்த நடிகர்’ அது இதுனு பட்டங்களா வந்து குவிஞ்சிருக்கும். ஒரு பட்டம் கிடைச்சது அப்பக்கூட ‘இவன் யாருடா தமிழ் தெரியாதவன்’னு கிளம்ப, அந்த பட்டத்தையும் கோவத்துல தூக்கிப்போட்டுட்டாரு!. திராவிடம்னு சொன்னதால எங்க அப்பாவுக்கு என்ன வளர்ச்சி இருக்கு? சிலை வைக்க யோசிக்கறாங்க. பெரியார் திடல்ல.. திராவிட கழக காம்பவுண்ட்ல எங்க அப்பாவோட பணம் இருக்குதா இல்லையா! இருக்கு. அங்கே எங்க ஐயாவுக்கு சிலை வைக்க யோசிக்கறாங்களே! எங்க ஐயா இறந்த அன்னிக்கு, தந்தை பெரியாரோட 101வது பிறந்தநாள். 1979 செப்டம்பர் 17. அந்த மாதிரி ஒரு மனுஷனுக்குகூட ஒரு அங்கீகாரம் கிடையாதே! அப்புறம் என்னங்க திராவிடம். மோடி ஜியாலதான் பா.ஜ.க.வுக்கு வந்தேன். நல்லது செய்யற மனுஷனை தவறா பேசிட்டோமேனுதான் இந்த கட்சிக்கு வந்தேன்.”

ராதாரவி

‘இது நம்ம பூமி’. ‘தை மாசம் பூவாசம்’னு சில படங்களை தயாரிச்சீங்க.. எப்படி இருக்கார் தயாரிப்பாளர் ராதாரவி?

”சினிமா எனக்கு ரொம்ப பிடிக்கும். முன்னாடி அஞ்சு படங்களைத் தயாரிச்சிருக்கேன். அதுல கடனாகி என் வீடு ஏலத்துலகூட வந்துச்சு. ஒரு விதத்துல அது நல்லதுனு நினைக்கறேன். அப்ப பத்து கடன்காரங்க என் வீட்டுக்கு வெளியேவே உட்காந்திருந்தாங்க. எனக்கு நகத்துல அடினு சொன்னாக்கூட, ‘ஒண்ணும் ஆகிடக்கூடாதுங்க’னு அவங்க கும்பிட்டுக்குவாங்க. அந்த கடனையெல்லாம் அடைச்சேன் பாருங்க. அந்த பத்து பேரும் இல்ல. கடன் இருந்தப்ப செக்யூரிட்டி பிரச்னையும் இல்ல. ஏன்னா, பத்துபேரும் வீட்டு வாசல்ல காத்திட்டு இருப்பாங்க. என் நண்பர்கிட்ட மறுபடியும் படம் எடுக்கணும் ஆசை வந்திடுச்சுனு சொன்னேன். ‘ஏன்டா வீட்டுக்கு செக்யூரிட்டி போடணும்னு ஆசையா?’னு கேட்டார். யெஸ்னு சொன்னேன். 48 வருஷமா இதுலேயே இருக்கறோம். எனக்கு சினிமா தவிர வேற எதுவும் தெரியாது.

சமீபத்துல கோவை நண்பர் ராபின் என்கிட்ட ‘நான் பணம் கொடுத்திடுறேன். நீங்க லைன் புரொட்யூசரா இருந்து ஒரு படம் எடுத்துக் குடுத்துடுங்க’ன்னு கேட்டுக்கிட்டார். அதனால அடுத்து ஒரு படம் தயாரிக்க ரெடியாகிட்டேன். இன்னொரு விஷயம், புரொடக்‌ஷன் எனக்கு ரொம்ப பிடிக்கும். லாபம், நஷ்டம் வேற. ஆனா, ஒரு படத்தை தயாரிச்சா நூறு குடும்பங்களை வாழ வச்ச பெரிய சந்தோஷம் கிடைக்கும்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.