புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி டாக்டர் பாரதி பிரவின் பவார் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது:
நாட்டிலுள்ள மாவட்ட மருத்துவமனைகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக டயாலிசிஸ் சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் 2016 ஆம் ஆண்டு பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டம் தொடங்கப்பட்டது.
மொத்தம் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 569 மாவட்டங்களில் ஹீமோடையாலிசிஸ் இயந்திரங்களின் மூலம் பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் படி,வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சேவைகளை இலவசமாக வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆதரவு வழங்குகிறது.
மேலும் இத்திட்டத்திற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளை அடிப்படையில் நிதி உதவி வழங்கப்படுகிறது.
டிசம்பர் 2021 வரையிலான தரவுகளின் படி தமிழ்நாட்டில் 121 டயாலிசிஸ் மையங்களும், புதுச்சேரியில் 2 டயாலிசிஸ் மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்…
பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு நிறைவு – மாநிலங்களவை மார்ச் 14 வரை ஒத்திவைப்பு