கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றது. கனடா தலை நகரில் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டிரக் ஓட்டுநர்களை சாடினார்.
இந்நிலையில், கண்டாவில் டிரக் ஓட்டுநர்கள் நடத்தும் போராட்டத்தினால், அமெரிக்க-கனடா இடையிலான முக்கிய வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால், போராட்டத்தை தணிக்க ஆட்சி அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு ஜோ பைடன் நிர்வாகம் வியாழக்கிழமை கனடாவை வலியுறுத்தியது என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், “(அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு) செயலாளர் (அலெஜான்ட்ரோ) மயோர்காஸ் மற்றும் (போக்குவரத்து செயலாளர் ) புட்டிகீக் ஆகியோர் தங்கள் கனடா சகாக்களுடன் பேசினர், எல்லை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை தீர்க்க அரசு அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு அவர்களை வலியுறுத்தினர்” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் படிக்க | கனடாவில் வலுக்கும் போராட்டம்; ஒடாவாவில் அவசர நிலை பிரகடனம்!
முன்னதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஒட்டாவாவில் கோவிட்-19 தடுப்பூசியை கட்டாயமாக்கும் உத்தரவிற்கு எதிரான போராட்டம் “நிறுத்தப்பட வேண்டும்” என்று கூறினார். போராட்டத்தினால் ஏற்பட்ட இடையூறுகளை மேற்கோள் காட்டிய, பிரதமர் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, உள்ளூர்வாசிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
கனடாவின் நாடாளுமன்றத்தில் திங்களன்று ஆற்றிய உரையில், நாட்டின் பொருளாதாரம், ஜனநாயகம் மற்றும் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை என அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்த தனிநபர்கள் முயற்சிப்பதாக ட்ரூடோ சாடினார்.
இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கனடாவில் அதிகரிக்கும் பதற்றம்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவு?