டெல்லி: கேரளா, மேற்குவங்கத்தை போல உத்திரப்பிரதேசம் மாறிவிடக்கூடாது என்ற யோகி ஆதித்யநாத் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். உத்திரப்பிரதேச மாநில தேர்தல் பரப்புரையின் போது அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தேர்தலில் பாஜக தோற்றால் உத்திரப்பிரதேசம் மாநிலமானது கேரளா, மேற்குவங்கம் மாநிலம் போல் ஆகிவிடும் என தெரிவித்தார். இந்நிலையில் யோகி ஆதித்யநாத் பேச்சு குறித்து விவாதிக்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்திருந்தனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து அவையில் இருந்து காங்கிரஸ், சி.பி.எம். திரிணாமுல் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். யோகி ஆதித்யநாத் கருத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தனர். உத்திரப்பிரதேசம் கேரளாவை போல மாறினால் கல்வி, சுகாதாரம், மனிதவளம் உள்ளிட்ட துறைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் தலைவர்கள் கூறியுள்ளனர்.