புதுடில்லி:”கொரோனா பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்து விடாதீர்கள். தற்போது பின்பற்றும் தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு நெறிமுறைகள் எதிர்காலத்திலும் தொடர வேண்டும். உருமாறிய வகை வைரஸ் எந்த நேரத்திலும், எங்கு வேண்டுமானாலும் பரவலாம். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
இந்த ஆண்டு இறுதியில் நிலைமை சற்று சீரடையலாம்,” என, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் நேற்று தெரிவித்தார்.கொரோனா பரவல் குறித்து, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியதாவது:’எச்.ஐ.வி., ஜிகா, எபோலா, சார்ஸ்’ உட்பட புதிதாக உருவாகும் அனைத்து வைரஸ்களும் மிருகங்களிடம் இருந்தே மனிதர்களுக்கு பரவுகின்றன.
கொரோனா வைரஸ் கூட வவ்வால்களிடம் தோன்றி, பின்னர் மனிதர்களுக்கு பரவியது. அவசர நிலைஆனால், இந்த பரவல் எப்போது, எப்படி நிகழ்கிறது என்பது மட்டும் இன்னும் புதிராகவே உள்ளது. எதிர்கால பெருந்தொற்று பரவல்களை தடுக்க இதைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம்.சீனாவின் வூஹான் நகரில் உள்ள தொற்று நோயியல் ஆய்வு கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது என்பது முழுமையாக நிராகரிக்கப்படவில்லை.
ஆனால், அதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். சீனா சென்று ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள், இந்த வைரஸ் மிருகத்திடம் இருந்தே மனிதர்களுக்கு பரவியதாக கூறுகின்றனர். இது பற்றி சீனாவில் இன்னும் பல ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது.கொரோனா தொற்று பரவல் துவங்கிய போது, உலக சுகாதார நிறுவனம் அதை இன்னும் சிறப்பாக அணுகி இருக்கலாம் என இப்போது தோன்றுகிறது.
ஆனால், சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையை நாங்கள் அறிவித்த போது, சீனாவில் சில நுாறு பேருக்கு மட்டுமே தொற்று பரவி இருந்தது. சீனாவுக்கு வெளியே இரண்டு பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஒரு மரணம் கூட நிகழவில்லை.ஆனால், எங்கள் எச்சரிக்கையை பெரும்பாலான நாடுகள் உதாசீனப்படுத்தின.
எனவே, நம்மிடம் இருந்த பொன்னான நேரத்தை நாம் வீணடித்துவிட்டோம். கொரோனா பரவல் முடிவுக்கு வந்துவிட்டது என நினைத்துவிடாதீர்கள். தற்போது நாம் பின்பற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் தொடர வேண்டும்.உருமாறிய வகை வைரஸ் எந்த நேரத்திலும், எங்கு வேண்டுமானாலும் பரவலாம். எனவே, எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
இந்த ஆண்டு இறுதியில் நிலைமை சற்று சீரடையும் என நம்புகிறோம்.ஆப்ரிக்காவில் 85 சதவீத மக்கள், முதல் ‘டோஸ்’ தடுப்பூசி போடவில்லை. இது, புதிய வகை கொரோனா வைரஸ் உருவாக காரணமாக அமையும்.கண்காணிப்புஎனவே, பாரபட்சமின்றி அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும். இதர வைரஸ்களை எதிர்கொள்வது போல, கொரோனா வைரசுடன் வாழ்வது எப்படி என்ற தெளிவு, எதிர்காலத்தில் மக்களுக்கு வந்துவிடும். சிறப்பான கண்காணிப்பு நடைமுறைகள் வந்துவிடும். சாதாரண சளி, ஜலதோஷம் போன்ற பாதிப்புகளின் போது கூட முக கவசம் அணிய வேண்டும் என்ற பழக்கத்தை நாம் எதிர்காலத்திலும் தொடர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.