விழுப்புரம்: ”கோபாலபுரம் ஸ்டைலை தற்போது நகராட்சி, பேரூராட்சிகளிலும் திமுகவினர் கொண்டுவந்துவிட்டனர்” என்று விழுப்புரம் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது: “குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு தொடர்ந்து வாக்களித்தும், மக்களின் வாழ்க்கைத்தரத்தில் முன்னேற்றம் இல்லை. ஒவ்வொரு தேர்தலில் பெரிய கட்சி, பெரிய கட்சி என வாக்களித்து வாய்ப்பளித்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
கடந்த 8 ஆண்டுகளில் ஒரு மனிதனிடம் வாழ்க்கையை மாற்றியது பாஜக. 57 லட்சம் கழிப்பறைகளை தமிழகத்தில் பாஜக அரசு இலவசமாக கட்டிக் கொடுத்துள்ளது. முத்ரா கடன் திட்டத்தின் மூலம் பலரின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி கிலோ 42 ரூபாய்க்கு வாங்கி மாநில அரசுக்கு ரூ 2-க்கு கொடுக்கப்படுகிறது. ஆனால், மாநில அரசு தாங்களே இலவசமாக வழங்குவதாக பில்டப் செய்கிறது.
திமுக நகைக்கடன் தள்ளிபடி என அறிவித்துவிட்டு தற்போது 73 சதவீத சகோதரிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படவில்லை. ஆயிரம் ரூபாயை 4 ஆண்டுகளில் தருவோம் என்கிறார்கள். 4 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பீர்களா? 8 மாத கால ஆட்சி மக்களிடம் 80 ஆண்டுகாலம் ஆண்டபோது ஏற்படும் சலிப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜக அலுவலகம் மீது குண்டு வீசியவரை போலீஸார் பிடித்து விசாரித்தபோது, நீட் தேர்வை ஆதரிப்பதால் குண்டு வீசியதாக சொல்லியுள்ளார். பாஜக மட்டுமே திமுகவை விமர்சித்து பேசி வருகிறது. திமுக அமைச்சர் மஸ்தான், தன் மனைவியான வேட்பாளரிடம் நேர்காணல் நடத்துகிறார். கோபாலபுரம் ஸ்டைலை தற்போது நகராட்சி, பேரூராட்சிகளிலும் திமுகவினர் கொண்டுவந்துவிட்டனர்.
மக்களின் வலியைத் தெரிந்தவர்கள் பாஜக வேட்பாளர்களே. தமிழகத்தில் உள்ள 27 மாநகராட்சிகளில் 25 கிறிஸ்தவர்கள், 8 இஸ்லாமியர்களுக்கு பாஜக இத்தேர்தலில் வாய்ப்பளித்துள்ளது. அதிகமான மாநகராட்சிகளில் திமுகவைவிட சிறுபான்மையினருக்கு இத்தேர்தலில் பாஜக அதிக இடங்களை அளித்துள்ளது.
கரோனாவால் 30 கோடி பேர் இறப்பதாக ராகுல் காந்தி கூறிவிட்டு இத்தாலி சென்றுவிட்டார். தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஹார்ட் அட்டாக் வருமென்று ஒரு தலைவர் சொன்னார். கரோனாவை வெல்ல இந்திய தயாரிப்பான தடுப்பூசி பூனாவிலிருந்து கொண்டுவரப்பட்டு, அனைவருக்கும் 2 தவணை செலுத்தப்பட்டுள்ளது. 170 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுள்ளது” என்று அண்ணாமலை பேசினார்.