கோயில் நிலங்களிலிருந்து வர வேண்டிய 2,390 கோடி ரூபாய் வாடகை பாக்கியை வசூலிக்க தமிழக இந்து சமய அறநிலையத்துறை எடுத்து வரும் நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள், இடங்கள், கட்டடங்கள் ஆகியவற்றின் வாடகை பல ஆண்டுகளாக வசூலிக்கப்படவில்லை என வெங்கட்ராமன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், வாடகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த ஆண்டு அக்டோபர் வரை தமிழக அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்களிலிருந்து வர வேண்டிய வாடகை பாக்கி 2,390 கோடி ரூபாயை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறநிலையத்துறையிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். முறையாக வசூலித்திருந்தால் 100 கோயில்களை நன்றாக பராமரித்திருக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
காணொலி மூலம் ஆஜராகியிருந்த ஆணையர், “ஒரு வருடத்திற்கு 540 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நாளொன்றுக்கு 2 முதல் 3 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார். அனைத்து கோயில்களின் சொத்துக்களும் தொகுக்கப்பட்டு, வாடகைதாரர்கள் மற்றும் வாடகை செலுத்தாதவர்களின் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் அவை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM