ஆவடியில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆவடியில் மாநகர போக்குவரத்து பணிமனை இயங்கி வருகிறது. இங்கிருந்து சென்னையின் பிராட்வே, கோயம்பேடு, கிண்டி, உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அருகில் உள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பயணம் செய்கின்றனர்.
இந்தநிலையில் இன்று காலை திடீரென பேருந்து பணிமனை வாசலில் கூடிய பொதுமக்கள், பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை, சரியான நேரத்திற்கு வருவதில்லை என குற்றம்சாட்டி அவ்வழியே வந்த அரசு பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பேருந்துகள் அங்கங்கே நிறுத்தப்பட்டன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுத்தியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது..Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM