”‘ஜெய் பீம்’ ஆஸ்கர் வரை சென்றது போனஸ்தான்” – இயக்குநர் தா.செ ஞானவேல் சிறப்புப் பேட்டி

‘ஜெய்பீம்’  வெளியாகி 100 நாட்களைக் கடந்தாலும் இன்னமும் அப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ரசிகர்கள் மத்தியில் அடங்காமல் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமல்லாது, வெகுஜன மக்களிடமும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி ஆஸ்கர் தகுதிப் பட்டியலிலும் இடம்பிடித்து உலக சினிமா ரசிகர்களை உற்றுநோக்க வைத்தது. ஜெய் பீமை  உலகமெங்கும் ஒலிக்கச்செய்த இயக்குநர் தா.செ. ஞானவேலிடம் பேசினோம்,

’ஜெய் பீம்’ வெளியாகி 100 நாட்கள் கடந்தப் பின்னும் இன்னும் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறதே… இந்த 100 நாட்களை எப்படிக் கடந்தீர்கள்?

“’ஜெய் பீம்’ தொடர்ந்து பாராட்டப்பட்டு வருவது சந்தோஷமாக இருக்கிறது. நல்லபடியாக ஒரு விஷயத்தைச் செய்தோம். அது எல்லோருக்கும் கனெக்ட் ஆகியிருக்கு. குறிப்பாக, இளம் சமூகத்தினருக்கும் சேர்த்து ஒரு நம்பிக்கை அளித்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சிதான். அதேசமயம், படம் வெளியானப் பிறகு 15 நாட்கள்தான் நான் பரபரப்பாக இருந்தேன். அதன்பிறகு, அடுத்தப் படத்திற்கு என்ன பண்ணலாம்? என்னக் கதைக்களத்தைத் தேர்ந்தெடுக்கலாம்? போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினேன். இப்படித்தான் நாட்கள் கழிந்தன. படம் வெளியானவுடன் அடுத்தப் பணிகளில் நாம் சென்று விடவேண்டும்”.

உங்கள் அடுத்தப்படம் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும் என்பதால் கேட்கிறேன். அடுத்தப் படம் எந்த மாதிரியான கதைக்களம்?

“என்ன கதைக்களம் என்று இன்னும் முடிவை நோக்கி நகரவில்லை. அதனைப் பெரிதாக மனதில் ஏற்றிக்கொள்ளவும் இல்லை. ஒரு படம் பண்ணிவிட்டு அதைவிடப் பெரிய படம் கொடுக்கவேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. ஒரு நல்லக் கதையை சின்சியராக சிறப்பாக பண்ணவேண்டும் என்றே எப்போதும் நினைப்பேன். அவ்வளவுதான். ‘ஜெய் பீம்’ படத்திற்கு எல்லாமே சேர்ந்து அமைந்தது. அப்படி மற்றக் கதைகளுக்கும் அமைந்தால் இந்த மாதிரி ஒரு விஷயமாக மாறும்”.

’கூட்டத்தில் ஒருவன்’-‘ஜெய் பீம்’ படங்களுக்கான இடைவெளி என்பது நான்கு ஆண்டுகள். உங்கள் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு இந்த வருடத்திற்குள் வரும் என்று எதிர்பார்க்கலாமா?

”கண்டிப்பாக வரும். பொதுவாவே, ஒரு கதையை பொறுமையாகத்தான் பண்ணுவேன். கடகடன்னு வருடத்திற்கு ஒரு படம் பண்ண முடியுமான்னு எனக்குத் தெரியலை. கதை எப்போ திருப்தியா வருதோ அப்போதான் அடுத்தப் படத்துக்குப் போவேன்”.

image

‘கூட்டத்தில் ஒருவன்’ வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால்,’ஜெய் பீம்’ கலை நேர்த்தி – வெற்றி என என அனைத்து வகையிலும் கவனம் ஈர்த்தது. இந்த வெற்றிக்கான உழைப்பு எத்தகையது?

“’ஜெய் பீம்’ படத்திற்கு என்ன உழைப்பை போட்டேனோ, அதே உழைப்பைத்தான் ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்திற்கும் போட்டேன். இன்னும் சொல்லப்போனால், முதல் படம் என்பதால்‘கூட்டத்தில் ஒருவன்’ படத்திற்கே அதிகமான உழைப்பைக் கொட்டினேன். அடுத்ததும் இதேமாதிரி ஒரு படம் பண்ணனும்னு நினைக்கல. எல்லாப் படத்தையும் நல்லா பண்ணனும்; உழைப்பைக் கொடுக்கணும் என்றே விரும்புகிறேன்”.

‘ஜெய் பீம்’ வெற்றிக்குப் பிறகு கண்டிப்பா பல நடிகர்கள் கதை கேட்டிருப்பார்களே?

”கிட்டத்தட்ட எல்லா ஜானர்களிலும் கதை சொல்லும்படி பலர் கேட்டிருந்தார்கள். ஆனால், கதை சொல்லி ஓகே ஆகும்வரை நாம் உறுதியாக சொல்ல முடியாதில்லையா? இறுதி செய்தபிறகே சொல்ல முடியும்”.

ஓடிடி என்பதால் ‘ஜெய் பீம்’ உலகம் முழுக்க கவனத்தைக் குவித்தது. இதுவே தியேட்டர் வெளியீடாக இருந்திருந்தால் இந்தக் கவனம் கிடைத்திருக்குமா?

”அதற்கு வாய்ப்பு குறைவுதான். தியேட்டர் வெளியீடாக இருந்திருந்தால், அதிகபட்சம் தமிழ் – தெலுங்கு என்று உருவாக்கியிருப்போம். மற்ற மொழிகளில் வெளியாகியிருக்க சாத்தியம் இல்லாமல் போயிருக்கும். எல்லா மொழியும் சேர்ந்து அமைந்தது ஓடிடி என்பதால் சாத்தியமானது. இதுல ஒரு ப்ளஸ்.. அதுல ஒரு ப்ளஸ், இதுல ஒரு மைனஸ் – அதுல ஒரு மைனஸ் மாதிரியான விஷயம்தான் அது. ஓடிடி என்பதால் உலகம் முழுக்க மக்கள் பார்த்தார்கள்”.

’ஜெய் பீம்’ ஆஸ்கர் தகுதிச் சுற்றில் இடம்பிடித்தபோது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். அந்த நாட்கள் உங்களுக்கு ஒருவிதமான அழுத்தத்தை உண்டாக்கியதா?

“ஆஸ்கருக்கு அனுப்பவேண்டும் என்றெல்லாம் நினைத்து தனியாக வேலை செய்யவில்லை. ஒரு தமிழ் படம். அதிகபட்சம் இங்கிருக்கும் மக்களுக்கு கனெக்ட் ஆகவேண்டும் என்றுதான் யோசித்தேன். அதனை, உண்மையாகச் செய்தேன். அது அடுத்தடுத்த கட்டத்திற்குச் சென்றது. ஒரு தகுதியும் இருந்தது. அதனால், போனது. அப்படி விருதுக்காக உழைத்திருந்தால் எனக்கு நீங்கள் சொல்வதுபோல் பிரஷர் வந்திருக்கும். ஆஸ்கர் சென்றதெல்லாம் போனஸ்தான். அதனால், போனஸ்க்கு பிரஷர் ஆக முடியாது. உலகப் படங்களுக்கு இணையாக ‘ஜெய் பீம்’ இருந்தது கொண்டாடப்பட்டது என்பதில் டபுள் ஹேப்பி”.

’ஜெய் பீம்’ ஆஸ்கர் இறுதிச் சுற்றுக்கு செல்லாததில் வருத்தம் இருக்கிறதா?

“எதுவும் நம் கையில் இல்லை. நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா என்ன? ‘ஜெய் பீம்’ ஒரு இடத்தை அதுவாக நோக்கிச் சென்றது. எனக்கு எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாதப்போ என்ன வருத்தம் இருக்கு?”.

image

’ஜெய் பீம்’ பெரும்பாலும் அம்பேத்கரிஸ்டுகள் உச்சரிக்கும் வார்த்தை. அதை வெகுஜன மக்களிடமும் கொண்டு சேர்த்துள்ளீர்கள். இந்தத் தலைப்பை வைக்க இன்ஸ்பிரேஷனாக அமைந்தது எது?

“’ஜெய் பீம்’ தலைப்பு இந்தக் கதைக்கு சரியாக இருக்கும் என்று தோன்றியது. ஏனென்றால், இது பழங்குடியின மக்களின் நீதிக்கான ஒரு போராட்டம். நீதிக்கான போராட்டத்தை அரசியல் அமைப்புச் சட்டம்தான் உறுதி செய்தது. அப்படி உறுதி செய்வதற்கான தொலைநோக்குப் பார்வையோடு அம்பேத்கர் அரசியல் அமைப்பை உருவாக்கினார். அதனால், ‘ஜெய் பீம்’ஸ்லோகன் இதுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்களின் ஸ்லோகன் அது. பழங்குடியின மக்கள் இன்னும் ஒடுக்கப்பட்ட நிலையில்தான் இருக்கிறார்கள். அதனால், இந்தத் தலைப்பு சரியாக இருக்கும் என்று தோன்றியது”.

2021-ஆம் ஆண்டு ‘ஜெய் பீம்’ பெரும்பாலானோரின் பிடித்தப் படமாக இருந்தது. இதே, ஆண்டில் வெளியான படங்களில் உங்களுக்குப் பிடித்தப் படம்?

”‘சர்பட்டா பரம்பரை’ ரொம்பப் பிடித்தப் படம். ஒரு படைப்பாகவும் கதையாகவும் ரொம்ப இன்ட்ரஸ்டிங்காவும் புத்துணர்வாகவும் இருந்தது. அதற்கடுத்ததாக, ‘மாநாடு’ பிடித்தது”.

image

காதலர் தினம் வருகிறதே… காதல் குறித்து?

”‘காதலர் தினம்’ சாதியை ஒழிப்பதற்கான ஒரு கருவி. காதல் திருமணங்கள் அதிகரிக்கவேண்டும். அவ்வளவுதான்”.

கவனிக்கத்தக்க பத்திரிகையாளர் நீங்கள். இத்தனை வருடத்திற்குப்பிறகு ஒரு வெற்றி. அந்தக் காத்திருப்புக்குப்பின் கிடைத்த வெற்றி எத்தகையது?

“நான் எதற்கும் காத்திருக்கவில்லை. கல்லூரியில் பேராசிரியராக ஆகவேண்டும் என்று படித்துக்கொண்டிருந்தேன். பின்பு பத்திரிகை துறைக்கு வந்தேன். அதன்பிறகு, விஷுவல் சரியாக இருக்கும் என்று சினிமாவுக்குள் வந்தேன். எல்லாம் விரும்பி வந்ததுதான். காத்திருப்பு என்று இல்லவே இல்லை. முன்பு எழுத்தில் சொல்ல முடிந்த விஷயத்தை விஷுவலாக சொல்கிறேன். பத்திரிகை துறையில் இருந்து வரவேதான் நாம் சொல்ல வந்த விஷயத்தை ஃபவர்ஃபுல்லாக சொல்லியிருக்கிறேன்; சொல்ல முடிகிறது என்று நினைக்கிறேன்”.

– வினி சர்பனா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.