மத்திய, மாநில அரசாங்கங்கள் பெண்களுக்கென்று பிரத்யேகமாகப் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றன. பெண்களின் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்குவதில் ஆரம்பித்து, அவர்களின் பெயரில் கடன் வாங்கினால் வட்டிச் சலுகைகள் என்பது வரை நிறைய சலுகைகள் பெண்களுக்கு உண்டு. அந்த வகையில் பெண்களுக்காக மட்டுமே பிரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்ட `சுகன்யா சம்ருதி யோஜனா – Sukanya Samrudhi Yojana’ எனும் செல்வமகள் சேமிப்புத் திட்டம், 2015-ம் ஆண்டு, ஜனவரி 22-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் ஆரம்பிக்கப்பட்டது.
பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தில் 26.03 லட்சம் கணக்குகள் தொடங்கி தேசிய அளவில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் 2021-ம் ஆண்டு வரை நாடு முழுவதும் 1.42 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், 29.12 லட்சம் புதிய கணக்குகளைத் தொடங்கி உத்தரப்பிரதேச மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.
இதன் குறைந்தபட்ச முதலீடு ரூ.250. ஆரம்பத்தில் இந்தத் தொகை 1,000 ரூபாயாக இருந்தது. அனைத்துத் தரப்பினரும் பயன்பெற வேண்டும் என்பதற்காகக் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை குறைக்கப்பட்டிருக்கிறது. ரூ.250-க்குப் பிறகு, ரூ.50-ன் மடங்குகளில் அதாவது ரூ.300, ரூ.350, ரூ.400 என்பது போல் முதலீடு செய்து வரலாம். இந்தத் திட்டம் ஆரம்பிக்கபட்டபோது ஆண்டுக்கு 9.6% வட்டி வழங்கப்பட்டது. நாட்டில் வட்டி விகிதம் படிப்படியாகக் குறைந்து வரவே, தற்போதைய நிலையில் ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டம் யாருக்கு ஏற்றது, யாருக்கு ஏற்றது இல்லை, இந்தத் திட்டத்தில் சேருவதற்கான அடிப்படைத் தகுதிகள் என்ன என்பது பற்றியெல்லாம் மேலும் விளக்குகிறார் நிதி ஆலோசகர் சிவகாசி மணிகண்டன் (Aismoney.com).
அடிப்படைத் தகுதி
குழந்தையின் வயது 10 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கான பெற்றோர் அல்லது சட்டப்படியான காப்பாளர் இந்தக் கணக்கை ஆரம்பிக்கலாம். ஒருவர் ஒரு பெண் குழந்தை அல்லது அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தையின் பெயரில் இந்தக் கணக்கை ஆரம்பிக்கலாம்.
ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் வரை அல்லது மூன்று குழந்தைகள் (இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள், முதல் பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள்) வரை இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெற முடியும்.
இந்தியக் குடிமக்கள் மட்டுமே தங்களின் பெண் குழந்தைகளுக்கு இந்தக் கணக்கை ஆரம்பிக்க முடியும். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ-க்கள்), தங்களின் பெண் குழந்தைகளுக்காக இந்தக் கணக்கை ஆரம்பிக்க முடியாது. கணக்கை ஆரம்பிக்க கட்டணம் எதுவும் கிடையாது.
கணக்கை எப்படி ஆரம்பிப்பது?
இந்தியாவிலுள்ள எந்தத் தபால் அலுவலத்திலும் இந்தக் கணக்கை ஆரம்பிக்க முடியும். இந்தத் திட்டத்தின் மூலம் அதிகம் பேர் பயனடைய வேண்டும் என்பதற்காக வங்கிகளிலும் இந்தக் கணக்கை ஆரம்பிக்கும் வசதியை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
பெரும்பாலான பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் இந்தக் கணக்கை ஆரம்பிக்க முடியும். இந்தக் கணக்குகளை வங்கிகள் நிர்வகித்தாலும் இது மத்திய அரசின் திட்டமாகத்தான் அமல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தத் திட்டத்தில் வங்கிகள் மூலம் முதலீடு செய்தாலும் அசல் மற்றும் வட்டிக்கு மத்திய அரசின் முழுமையான உத்தரவாதம் உண்டு. பெண் குழந்தையின் பிறப்புப் சான்றிதழ், பெற்றோர் / காப்பாளரின் புகைப்பட அடையாள ஆதாரம் மற்றும் முகவரிக்கான ஆதாரம் இருந்தால்தான் இந்தக் கணக்கை ஆரம்பிக்க முடியும்.
டெபாசிட்டை ரொக்கம், காசோலை, வரைவோலை என எந்த முறையிலும் செலுத்தலாம். முன்னணி வங்கிகளில் ஆன்லைன் மூலமும் இந்தக் கணக்கை ஆரம்பித்து இன்டர்நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்தி வர முடியும். மேலும், மாதத்துக்கு, ஆண்டுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டலாம். மொத்த முதலீடாகவும் செய்யலாம். ஆனால், நிதியாண்டில் ரூ.1.5 லட்சத்துக்கும் மேல் கட்ட முடியாது.
முன்கூட்டியே பணத்தை எடுக்க முடியுமா?
பெண் குழந்தையின் வயது 18-ஐ தாண்டாதபோது அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறுவதற்கு முன் பணத்தை எடுக்க முடியாது. அதன்பிறகு 50% தொகையைக் கல்விச் செலவுக்காக எடுத்துக்கொள்ளலாம். கணக்கு தொடங்கி ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நிபந்தனைக்கு உட்பட்டு முன் கூட்டியே கணக்கை முடித்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. வைப்புத் தொகையாளருக்கு மரணம் ஏற்பட்டால் இடையில் பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுகிறது. மருத்துவ உதவி, அச்சுறுத்தும் நோய்கள் பாதிப்பு ஆகிய காரணங்களுக்காக ஐந்தாண்டுக்குப் பிறகு எடுக்க முடியும்.
முதலீட்டுக்கு முழு பாதுகாப்பு
இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீடு மற்றும் வட்டிக்கு முழுமையான பாதுகாப்பு இருக்கிறது. அந்தப் பாதுகாப்பை மத்திய அரசு அளிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டி ஓரளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பதால், பணவீக்க விகித பாதிப்பிலிருந்து முதலீட்டைப் பாதுகாக்கிறது எனலாம். அதாவது, இந்தியாவில் சராசரி சில்லறை பணவீக்க விகிதம் அண்மை ஆண்டுகளில் சுமார் 5 சதவிகிதமாக இருக்கும் நிலையில், செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி 7.6 சதவிகிதமாக இருப்பது பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
யாருக்கு ஏற்றது?
பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோருக்கு ஏற்ற திட்டம் இது. மாதம்தோறும் முதலீடு செய்யும் வாய்ப்பு வசதி கொண்டவர்களுக்கு ஏற்றதாகும். மேலும், நீண்ட காலத்தில் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் கல்யாணத்துக்குப் பயன்படுவதாக உள்ளது.
யாருக்கு ஏற்றதல்ல?
இந்தியாவில் வழக்கமான நுகர்வோர் பணவீக்க விகிதத்தைவிட கல்விச் செலவுக்கான பணவீக்க விகிதம் கிட்டத்தட்ட இரு மடங்காக சுமார் 10 சதவிகிதமாக இருக்கிறது. இதேபோல்தான், கல்யாணச் செலவுக்கான பணவீக்க விகிதமும் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில், செல்வமகள் சேமிப்புத் திட்டம் மூலம் கிடைக்கும் தொகை பெண் பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணச் செலவுகளை முழுமையாக ஈடுகட்டுமா என்பது கேள்விக்குறிதான்.
அந்த வகையில், முதலீட்டில் ரிஸ்க் எடுக்கக்கூடியவர்களுக்கும் அதிக தொகுப்பு நிதி தேவைப்படுபவர்களுக்கும் இந்தத் திட்டம் ஏற்றதல்ல. அவர்கள் நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் (ஈக்விட்டி ஃபண்டுகள்) முதலீடு செய்துவரலாம். முதலீட்டுக்கு வரிச் சலுகை மற்றும் வருமானத்துக்கு வரி அனுகூலம் (குறைவான வரி) வேண்டும் என்பவர்கள், பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டமான இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்து வரலாம். செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்து கொண்டு, அதிக தொகைக்கு நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
மாற்று முதலீடுகள்
ஏற்கெனவே சொன்னது போல, ரிஸ்க் எடுப்பவர்கள் நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம். ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் நீண்ட கால கடன் ஃபண்டுகள், ஹைபிரிட் ஃபண்டுகள், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகளில் கலந்து முதலீடு செய்து வரலாம். முதலீட்டுக்கு வரிச் சலுகை தேவை எனி்ல், இ.எல்.எல்.எஸ் ஃபண்டைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
எப்போது பணம் கிடைக்கும்?
இந்தத் திட்டத்தின் அதிகபட்ச முதலீட்டுக் காலம் 15 ஆண்டுகளாகும். அதே நேரத்தில், இந்தக் கணக்கு பெண் குழந்தைகளின் 21-வது வயதில் முதிர்வடையும். பெண் குழந்தையின் திருமணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன் அல்லது திருமணத்துக்கு மூன்று மாதத்துக்குப் பிறகு, பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு கல்யாணத்துக்கான ஆதாரம் கொடுக்க வேண்டும்.
கூட்டு வட்டி
வட்டி விகித நிர்ணயம், அரசு கடன் பத்திரங்கள் கொடுக்கும் வருமானத்தை (Government Bond Yield) சார்ந்திருக்கிறது. மத்திய அரசின் 10 ஆண்டு கடன் பத்திரம் கொடுக்கும் வட்டி வருமானத்தைவிட 0.75% அதிகம் இந்தத் திட்டத்துக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வட்டி என்பது ஒவ்வொரு மூன்று மாதத்துக்கு ஒரு முறை மாற்றத்துக்கு உட்படும். தற்போதைய வட்டி விகிதம் 2022 மார்ச் 31 வரைக்கும் மாற்றமில்லாமல் இருக்கும்.
நிதி ஆண்டு இறுதியில் வட்டிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அடுத்த ஆண்டு இந்த வட்டிக்கு வட்டி போடப்படுவதால், செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் கூட்டு வட்டி வளர்ச்சி முறையில் பணம் பெருகி வரும்.
வருமான வரிச் சலுகை
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு 80சி பிரிவின்கீழ் நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு, ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை இருக்கிறது. மேலும், முதலீட்டுப் பெருக்கம், முதிர்வுத் தொகைக்கு வரி இல்லை என்பது இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.
பெண் குழந்தைககளின் கல்வி மற்றும் கல்யாணத்துக்கு திட்டமிடுபவர்களுக்கு ஏற்றத் திட்டம் இது என்பதால், குடும்பத் தலைவிகள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது குறித்து பரிசீலிக்கலாம்.