புதுடெல்லி:
பெட்ரோல்-டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாறுதல் செய்து நிர்ணயிக்கும் அதிகாரத்தை பெற்று உள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தை பொருத்து இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் நிறுவனம் ஆகியவை பெட்ரோல்-டீசல் விலையை மாற்றம் செய்யும்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெட்ரோல்-டீசல் விலை நாடு முழுவதும் மிக அதிகமாக அதிகரித்தது. முக்கிய நகரங்களில் 100 ரூபாயை கடந்து பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டன. தொடர்ந்து தினமும் விலை அதிகரித்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 3-ந் தேதி தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக குறைத்தது. கலால் வரியை குறைத்ததன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.10-ம் குறைந்தது.
அன்று முதல் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. சர்வதேச சந்தைகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றத்தை கொண்டு வரவில்லை. இன்று 99-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாறாமல் அதே நிலையில் உள்ளது.
நாளை (சனிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாவிட்டால் தொடர்ந்து 100 நாட்களாக விலை உயராமல் இருக்கும் சாதனை படைக்கப்படும். பெட்ரோல், டீசல் விலை 100 நாட்களாக உயராததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43-க்கும் விற்பனையாகி வருகிறது.