பெங்களூரு-கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொற்று அல்லாத நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்கலாம் என, சுகாதாரத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.மாநிலத்தில், கொரோனா 3வது அலை தீவிரமடைந்ததால், சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தது. ‘மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைகளுக்கு மட்டும், கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சாதாரண நோய்களால் அவதிப்படுவோர், மருத்துவமனைக்கு வரக்கூடாது. ‘தனியார் மருத்துவமனைகளில், 50 சதவீதம் படுக்கைகளை, கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும்’ என, அரசு உத்தரவிட்டிருந்தது.தொற்று தீவிரமாக இல்லாததால், நோயாளிகள் பலரும் வீட்டில் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களுக்கு வருவதில்லை. அரசு மருத்துவமனைகளிலேயே, படுக்கைகள் காலியாக உள்ளன. மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, வாய்ப்பளிக்கும்படி, தனியார் மருத்துவமனைகள் கோரிக்கை விடுத்தன.இதற்கிடையில் தொற்று குறைந்ததால், அரசின் உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: அரசு, தனியார் மருத்துவமனைகளில், குறைந்த எண்ணிக்கையில் படுக்கைகளை மட்டும், கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கிவிட்டு, மற்ற படுக்கைகளை தொற்று அல்லாத நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம். யாருக்கும் சிகிச்சை மறுக்கப்படக்கூடாது.இவ்வாறு உத்தரவிட்டு உள்ளது.
Advertisement