சென்னை,
வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி ஆளும் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சியினர் பிரசாரத்துக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் மேற்கொள்ளலாம் என்றும்,
வாகன பேரணி, ஊர்வலம் போன்றவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கி கொள்ளப்படுவதாகவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாகன பேரணி, ஊர்வலம் செல்ல விரும்பும் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரம் மேற்கொள்ளும் இடங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு முன்கூட்டியே தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்…தமிழக மக்களை எப்போதும், யாராலும் ஏமாற்ற முடியாது – மு.க.ஸ்டாலின்