இனி அனைத்து கார்களிலும் 3 பாயிண்ட் சீட் பெல்டுகள் கட்டாயம் பொருத்த வேண்டும் என கார் உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
பொதுவாக காரில் பயணிப்பவர்கள் வாகன ஓட்டுநர், ஓட்டுநர் அருகே அமர்ந்திருப்பவர் பின் இருக்கையில் அமர்ந்து இருப்பவர்களில் இருவர் மட்டுமே மும்முனை என்று சொல்லப்படும் த்ரீ பாயிண்ட்
சீட் பெல்ட்
அணிய முடிகிறது. பின் இருக்கையில் நடுப்பகுதியில் அமர்ந்திருப்பவருக்கு விமானங்களில் பயன்படுத்துவது போல இடுப்பில் பொருத்தப்படும் இருமுனை சீட் பெல்ட் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் நேரங்களில் நடுப்பகுதியில் அமர்ந்து இருப்பவரின் பாதுகாப்பு என்பது மற்றவர்களை காட்டிலும் குறைவாகவே காணப்படுகிறது.
இந்நிலையில், இனி நடு இருக்கைகளுக்கு மும்முனை சீட் பெல்ட் அமைப்பதை கார் உற்பத்தி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்
நிதின் கட்கரி
செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கார்களில் அனைத்து பயணிகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயம் ஆக்கப்படுகிறது. காரில் பயணிக்கிற அனைத்து பயணிகளுக்கும் சீட் பெல்ட்டுகளை வாகன உற்பத்தியாளர்கள் வழங்குவதை கட்டாயம் ஆக்கும் கோப்பில் கையெழுத்து போட்டுள்ளேன். நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது காலத்தின் தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.
எனினும், இந்த புதிய விதி எப்போது அமலுக்கு வரும் என்பதை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிடவில்லை.