திருச்சி:
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திருச்சி மாவட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் த.மா.கா. வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது.
இதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட சின்ன சறுக்கல் காரணமாக நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம். ஆனால் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு திட்டப்பணிகளை நிறைவாக தந்த அரசாக அ.தி.மு.க. அரசு இருந்தது.
2021 தேர்தலில் மீண்டும் நாம் அரியணை ஏறும் நிலை இருந்தது. ஆனால் தி.மு.க. அளித்த பொய்யான வாக்குறுதிகளும், அதனை மக்கள் நம்பியதாலும் சின்ன வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். ஆனால் இப்போது அதனை மக்கள் உணர்ந்து எண்ணிப் பார்க்கிறார்கள். வாக்குறுதிகளை நூற்றுக்கு நூறு சதவீதம் நிறைவேற்றிய அரசு அ.தி.மு.க. அரசு என்பது நிரூபணமாகியிருக்கிறது.
முன்னாள் முதலமைச்சர் மக்களின் அடிப்படை தேவையான உணவு , உடை, இருப்பிடம் ஆகியவற்றை தந்தார். 2 கோடியே 10 லட்சம் ரேஷன் அட்டைக்கு மாதந்தோறும் இலவசமாக 20 கிலோ அரிசி தந்து மக்களின் பசியை போக்கினார். 5 அரை லட்சம் மக்களுக்கு தரமான கான்கிரீட் வீடுகளை கட்டித் தந்தார். வேட்டி, சேலைகளை வழங்கினார்.
இன்னும் தாலிக்கு தங்கம், பட்டதாரி பெண்களுக்கு திருமண உதவித் தொகை ரூ.50 ஆயிரம், கல்விக்காக ரூ.33 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு என பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை அளித்தார். 2007-ல் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு வந்தபோது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று இருந்தது. ஆனால் அந்தத் தீர்ப்பினை கருணாநிதி அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து 2011-ல் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனவுடன் 3 முறை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து வலியுறுத்தினர். பின்னர் உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி இறுதித் தீர்ப்பினை அரசாணையாக வெளியிட செய்தார். இதைத் தானே தலைவர்கள் செய்ய வேண்டும்.
தஞ்சைத் தரணிக்கு சொந்தக்காரர்கள் என சொல்லிக் கொண்டு அதிகாரத்தை வைத்திருந்த அவர்களால் செய்யமுடியவில்லை. 2019-ல் கொரோனா வந்த போது அ.தி.மு.க. அரசு அதனை கட்டுப்படுத்தியது. ஆனால் இன்றைக்கு யாருக்கு வந்தால் என்ன? யார் செத்தால் என்ன? பிழைத்தால் என்ன? என்று இந்த அரசாங்கம் இருக்கிறது.
தற்போதைய தி.மு.க. அரசு 505 வாக்குறுதிகளை கொடுத்தது. ஆனால் எதையும் அவர்கள் முறையாக நிறைவேற்றவில்லை. இந்த ஆட்சி வெறும் காட்சியாக இருக்கிறது. திட்டங்கள் எதுவும் மக்களின் கைக்கு வரவில்லை. மக்களின் எண்ணங்கள் பூர்த்தியாகவில்லை. இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 தருவதாகச் சொன்னார்கள். உங்களுக்கு வந்ததா?
இதனை முதலமைச்சர் மகன் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டால் இன்னும் ஆட்சி நான்கு வருடம் இருக்கிறது, தருவோம் என்கிறார். ஆனால் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பாக முதல் கையெழுத்து ரூ.1000 திட்டம் தான் என்று சொன்னார்கள். ஆட்சிப் பொறுப்பேற்றதும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னார்கள் அவர்களால் முடியாது.
யாரை பார்க்க வேண்டுமோ அதைச் செய்யாமல், வாய்ச் சவடால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். தற்போது அவர்களின் பகல் வேஷம் கலைந்து இருக்கிறது. வாக்குறுதி அளித்த படி கல்விக்கடன் ரத்து செய்யப்படவில்லை. இந்தத் தேர்தலில் நேரடியாக மக்களை சந்திக்க அச்சப்படுகிறார்கள். காரணம் மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆகவே வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசு அ.தி.மு.க. அரசு. வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசு தி.மு.க. அரசு என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகை ரூ.2500 வழங்கியபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முகஸ்டாலின் இது போதாது ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றார்.
இப்போது 100 ஆவது கொடுத்தார்களா? தரமில்லாத பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்கள். இவற்றையெல்லாம் மக்கள் கண்கூடாகப் பார்த்து வேதனை கொண்டிருக்கிறார்கள். ஆகவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட இதுவே சரியான தருணம். ஏற்கனவே தி.மு.க.வின் முகமூடி கிழிந்து விட்டது. முழுமையாக முகமூடியை கிழிக்க இது நல்ல வாய்ப்பு.
இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தேர்தலில் அ.தி.மு.க. நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறவேண்டும். இன்னும் 2 ஆண்டுகளில் பாராளுமன்றத்திற்கு தேர்தல்வர இருக்கிறது. அந்த தேர்தலுடன் கண்டிப்பாக சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைந்தால், வருகிற பாராளுமன்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வு.க்கு மரண அடி விழும்.