"பாஜகவின் வேலை தமிழகத்தில் பலிக்காது; இது பெரியார் மண்"- கனிமொழி பேச்சு

கர்நாடகாவில் பள்ளி மாணவிகளின் உடை அணியும் உரிமையை கூட பாஜக நிர்பந்திக்கிறது; ஆனால், இதனை தமிழகத்தில் அவர்கள் செய்ய முடியாது; ஏனெனில் இது பெரியார் மண் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக எம்.பி. கனிமொழி பரப்புரை மேற்கொண்டார். மாநகராட்சியின் 17-வது வார்டான பழைய பேட்டை பேருந்து நிலையம் முன்பாக திமுக எம்.பி. கனிமொழி பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
image
தமிழகத்திற்கு பல்வேறு நெருக்கடிகள் நாள்தோறும் வந்து கொண்டிருக்கிறது. ஜிஎஸ்டி வரிபாக்கி, நீட் தேர்வு, இன்னும் வராத புயல் வெள்ள நிவாரண தொகை போன்ற பல்வேறு பிரச்னைகளை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு எதிர்கொண்டு வருகிறது. நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்றத்தில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் இருந்து திராவிட வளர்ப்பால் வளர்ந்த நயினார் நாகேந்திரன் எழுந்து சென்றது வருத்தும் அளிக்கிறது. அனைத்து தரப்பினரும் எதிர்த்து வரும் நிலையில் பாஜக மட்டும் நீட் வேண்டும் என சொல்வது தமிழக மாணவர்கள் மீது அக்கட்சியின் அக்கறையின்மையை காட்டுகிறது.
image
கர்நாடகாவில் பர்தா அணிந்த மாணவிகளை பள்ளிக்கு வர விடாமல் பாஜக அரசு செய்கிறது. எந்த பிரச்னையாக இருந்தாலும் மதச் சாயம் பூசும் செயலில் சில அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். ஆனால், இதனை அவர்களால் தமிழகத்தில் செய்ய முடியாது. ஏனெனில், இது பெரியார் மண். அண்ணா வாழ்ந்த மண். உங்களது கனவு ஒருபோதும் நிறைவேறாது. இவ்வாறு அவர் பேசினார்.
பழைய பேட்டையை தொடர்ந்து, மேலப்பாளையம் பகுதியில் கனிமொழி பரப்புரை மேற்கொண்டார். தொடர்ந்து பாளையங்கோட்டை மனகாவலம் பிள்ளை நகர் பகுதியிலும் அவர் பரப்புரையில் ஈடுபட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.