புதுடெல்லி: வரும் 24-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
2017-ம் ஆண்டு மே மாதம் அவர்மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேரில் ஆஜராகுமாறு பல முறை உத்தரவு பிறப்பித்தது. தற்போது இதுவே கடைசி வாய்ப்புஎன்றும் தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள வங்கிகளில் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடியவர் விஜய் மல்லையா. இவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை மத்திய அமலாக்கத் துறை, புலனாய்வு அமைப்புகள் மற்றும் வங்கிகளின் கூட்டமைப்பு ஆகியவை முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில், விஜய் மல்லையா நேரில் ஆஜராவது தொடர்பான மனுமீதான விசாரணை நீதிபதிகள் யு.யு.லலித், எஸ். ரவீந்திர பட் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் இதுகுறித்து நீதிபதிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தாவும் பங்கேற்றார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனு குறித்தும் விசாரிக்கப்பட்டது.
2016-ம் ஆண்டு மார்ச் மாதம் நீதிமன்ற உத்தரவை மீறியதாக மல்லையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மல்லையாவிடம் உள்ள அசையும் மற்றும் அசையாசொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதை விஜய் மல்லையா செய்யவில்லை. பிரிட்டனைச் சேர்ந்த மது தயாரிப்பு நிறுவனமான டியாகோவிடமிருந்து பெறப்பட்ட 4 கோடி டாலர் தொகையை விஜய் மல்லையா தனது மூன்று வாரிசுகள் பெயரில் மாற்றியுள்ளார். இது நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும் என புகார் செய்யப்பட்டது.
இதுகுறித்து மல்லையாவுக்கு கடன் அளித்த வங்கிகள் கூட்ட மைப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இது தவிர அன்னியச் செலாவணி மோசடி குறித்த வழக்கும் தனியாக இவர் மீது நிலுவையில் உள்ளது.
இந்த வழக்குகள் தொடர்பாக மல்லையா நேரில் ஆஜராகாமல் இருந்து வருகிறார். இப்போது இறுதியாக வரும் 24-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.