மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் குறித்து இன்று (11) பாராளுமன்றத்தில் கௌரவ பிரதமர் ஆற்றிய இரங்கல் உரை
இலங்கை அரசியலில் அழியாத நினைவுகளை விட்டுச் சென்ற அரசியல்வாதியாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைக் குறிப்பிடலாம்.
மங்கள சமரவீர கொழும்பு றோயல் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், லண்டனில் உள்ள புனித மார்ட்டின் உயர்கல்வி நிறுவனத்தில் தனது முதல் பட்டத்தையும் முடித்த பின்னர் 1983 இல் இலங்கை திரும்பினார்.
மங்கள சமரவீர 1988 இல் மாத்தறை தொகுதிக்கு தெரிவு செய்யப்பட்டதுடன், 1989 இல் முதன் முதலாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.
அன்று முதல் 31 ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக இருந்தார். தன் வாழ்நாளின் இறுதி வரை தனக்கே உரிய அரசியல் கொள்கையிலும் தொலைநோக்கு பார்வையிலும் நின்ற ஒரு அரசியல் பிரமுகர் என்றே சொல்லலாம்.
1989 இல் இலங்கைப் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய முதல் உரையிலிருந்து 2020 பெப்ரவரியில் அவர் ஆற்றிய கடைசி உரை வரை அந்த அரசியல் தத்துவம் நன்கு விளக்கப்பட்டுள்ளது.
1988-89 கலவரத்தின் போது நிலவிய அநீதிக்கு எதிராக மங்கள சமரவீர ஒரு முன்னணியை உருவாக்கினார். அதன் இணை குழுத்தலைவராக பணியாற்றினேன்.
1977 முதல் 1994 வரையிலான 17 ஆண்டுகால மக்களின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக, குறிப்பாக 88-89 பயங்கரவாதத்திற்கு எதிராகவும், நீதி மற்றும் சமூக ஜனநாயகத்திற்கான எனது போராட்டத்தின் வெற்றிக்காகவும் திரு.மங்கள சமரவீர அவர்கள் ஆற்றிய பணியை நான் இத்தருணத்தில் விசேடமாக நினைவுருகிறேன்.
1994 ஆம் ஆண்டு முதல் அமைச்சரவை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டதில் இருந்து, பல்வேறு அரசாங்கங்களில் பல பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்துள்ளார்.
தபால் மற்றும் தொலைத்தொடர்பு, நகர அபிவிருத்தி, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து, வெகுசன ஊடகம், வெளிவிவகார மற்றும் நிதி அமைச்சர் என்ற பதவிகளை வகித்து தனக்கு வழங்கப்பட்ட பதவிகளை புதிய திசையில் கொண்டு செல்ல மங்கள சமரவீர அவர்கள் எப்போதும் முயற்சித்தார்.
அவர் நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட அரசியலில் படைப்பாற்றல் மிக்க ஒருவராவார். மங்கள சமரவீர சவால்களுக்கு மத்தியிலும் தனது கருத்துக்களில் இருந்து விலகாது எப்போதும் அந்தக் கருத்துகளுக்காகவே நின்றார்.
பின்னர் அவர் சித்தாந்த ரீதியாக வேறுபட்ட அரசியல் முகாம்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும், மங்கள அவர் இறக்கும் வரை எனது தனிப்பட்ட நண்பராகவே இருந்தார்.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, நான் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டபோது, பல சவால்களை எதிர்கொண்டேன். அந்த சவால்களுக்கு மத்தியில் எனது வெற்றிக்காக மங்கள சமரவீர செய்த தியாகத்தை நான் குறிப்பிட்டாக வேண்டும்.
அவர் தனது அரசியல் வாழ்க்கையை தனது தனிப்பட்ட வாழ்க்கையுடன் பிணைத்துக் கொள்ளவில்லை.
மங்கள ஒரு கடுமையான விமர்சகர். மிகக் கூர்மையாக எதிராளியை தர்மசங்கடத்தில் ஆழ்த்தக்கூடிய பிரசாரகர் என்றும் பெயர் பெற்றவர்.
மங்கள முற்போக்கு சித்தாந்தத்தை கொண்டிருந்த போதிலும், அவர் அந்த மாகாணத்தின் கலாசாரப் பின்னணியின் அடிப்படையிலேயே மாத்தறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பதை நாம் அறிவோம்.
அமைச்சர் பதவியை வகித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தனது கட்சிக்காரர்களுக்காக சிறப்பான அர்ப்பணிப்புகளை செய்ய அவர் மறக்கவில்லை.
இதன் மூலம் அவருக்கு தனது தொகுதி மற்றும் மாவட்டத்தின் நற்பெயரும் புகழும் கிடைத்தது. மங்கள சமரவீர அவர்கள் அரசியலில் இருந்து விலகிய போது, அவரது மரணம் போன்றே எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதற்குக் காரணம் மங்கள என்பவர் அரசியலில் இருக்க வேண்டிய ஒரு அரசியல்வாதி.
போட்டி போட வேண்டிய, போராடக்கூடிய ஒரு போட்டியாளர். அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறியவுடன், நான் மங்களவை அழைத்து கூறினேன் ‘மங்கள, நீங்கள் அரசியலில் இருக்க வேண்டும்’ என்றேன். அதற்குக் காரணம், இந்த அரசியல் உலகிற்கு மங்கள போன்ற ஒரு போட்டியாளர் அவசியம்.
அரசியலை தனது தனிப்பட்ட வாழ்வில் கொண்டுபோய் பழிவாங்கல்களை மேற்கொள்ளவோ வெறுப்;பை ஏற்படுத்தவோ தயாராக இல்லாதவர்.
பாராளுமன்றத்திலோ அல்லது பொது மன்றங்களிலோ எமக்கிடையிலான கொள்கை வேறுபாடுகளை நாம் தெளிவாக விமர்சிக்க வேண்டும். ஆனால் மனிதாபிமானம் என்று வரும்போது அரசியலும் மனிதாபிமானமும் இரண்டு விடயங்கள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இலங்கை அரசியலில் மகத்தான பிரமுகர் ஒருவரான மங்கள சமரவீர அவர்களின் மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது மூத்த சகோதரி ஜயந்தி குணவர்தன அவர்கள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு எனது மற்றும் அரசாங்கத்தின் சார்பில் ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.