டொரன்டோ:கொரோனா வைரசுக்கு எதிராக மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை தயாரிக்கும் முயற்சியில் வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனாவுக்கு எதிராக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், தடுப்பூசி தொடர்பாக பல புதிய முயற்சிகளில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.கனடாவைச் சேர்ந்த மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான கட்டுரை, மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கொரோனா வைரஸ் வாய் அல்லது மூக்கு வழியாக உடலுக்குள் புகுவதாக இதுவரை நடத்திய ஆய்வுகளில் தெரிகிறது. இந்த வைரஸ் முதலில் சுவாச உறுப்புகளையே தாக்குகிறது.
தற்போது வழங்கப்படும் தடுப்பூசிகள் சிறப்பானவையாக இருந்தாலும், சுவாச உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இல்லை.அதனால், சுவாச உறுப்புகளை பாதுகாக்கும் வகையில், மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுஉள்ளோம். இதுவரை நடந்துள்ள ஆய்வுகளில் நல்ல பலன் கிடைத்துள்ளது. விரைவில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை நடத்தப்பட உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement