புதுடெல்லி:
வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது திட்டமிட்டபடி விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின்போது உள்ஒதுக்கீடு அரசியல் அமைப்பிற்கு எதிரானது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பா.ம.க. சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி பிப்ரவரி 15, 16-ம் தேதிகளில் விசாரணை நடைபெறும். இடைக்கால தடைவிதிக்க மறுப்பு தெரிவித்தது. ஏற்கனவே பணியில் அமர்த்தப்பட்டவர்களை நீக்கக்கூடாது, பிப்ரவரி 15-ந்தேதி மாணவர்கள் சேர்க்கை நடத்தக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், இருதரப்பு வாதங்களை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி 3,000 பக்கம் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும், சில ஆவணங்களை தாக்கல் செய்ய திங்கட்கிழமை வரை அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் வழக்கு விசாரணைதிட்டமிட்ட தேதியில் நடத்தப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர். மேலும் அந்த அறிவிப்பில், வரும் 15, 16 ஆகிய தேதிகளில் கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.