புதுடெல்லி: ஹிஜாப் விவகாரம் தொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதேவேளையில், ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சினையாக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஹிஜாப் வழக்கு தொடர்பாக நேற்று உத்தரவு ஒன்றைப் பிறப்பித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ‘ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகள் அணிய தடை விதிக்கப்படுகிறது. மாணவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தக் கூடாது. இவ்வழக்கு தொடர்பாக வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும்’ என்று தெரிவித்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ள முஸ்லிம் மாணவி ஒருவர், ‘ஹிஜாப் அணிவது எங்களின் அடிப்படை உரிமை. எனவே, கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் வலியுறுத்தினார். அப்போது, தலைமை நீதிபதி என்வி ரமணா, “இதுபோன்ற விஷயங்களை தேசிய அளவில் பரப்ப முயற்சிக்க வேண்டாம். நாங்கள் சரியான தருணத்தில் தலையிடுவோம்” என்றார். அதற்கு வழக்கறிஞர், “மாணவிகள் 10 ஆண்டுகளாக ஹிஜாப் அணிந்து வருகின்றனர். இந்த விவகாரம் பரந்துபட்ட வீச்சைக் கொண்டுள்ளது. அதனால் விசாரிக்க வேண்டும்” என்றார்.
அப்போது நீதிபதி ரமணா, “இதை பெரிதாக்க முயற்சிக்க வேண்டாம். என்ன நடக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். நீங்களும் சிந்தித்துப் பாருங்கள். இந்த விஷயத்தை தேசிய அளவில் பெரிதாக்கி டெல்லிக்குக் கொண்டுவர வேண்டுமா என்று யோசியுங்கள். ஏதேனும் தவறு நடந்தால். அப்போது நாங்கள் நீதியைக் காப்போம்” என்று பதிலளித்தார்.
ஹிஜாப் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்கவே முடியாது என்று உச்ச நீதிமன்றம் தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துவிட்டது.
கபில் சிபலுக்கும் எதிர்ப்பு: ஹிஜாப் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வின் மூலம் விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நேற்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். அதற்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, “இவ்வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான கூடுதல் அமர்வு விசாரிக்கிறது. அந்த அமர்வு வழக்கில் முடிவை எட்டட்டும். உச்ச நீதிமன்றத்தில் அந்த வழக்கை பட்டியலிட்டால் கர்நாடக உயர் நீதிமன்றம் வழக்கை விசாரிக்காது. எனவே, கர்நாடக உயர் நீதிமன்றமே விசாரிக்கட்டும். ஒருவேளை தேவைப்பட்டால் ஹிஜாப் வழக்கை விசாரிக்க பட்டியலிடுவது குறித்து பரிசீலிப்போம்” என்றார்.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) தலைமை நீதிபதி ரமணா, ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சினையாக்க வேண்டாம் எனக் கோரியுள்ளார்.