ADMK members meet Governor for local body elections: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், சுதந்திரமாக நடக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் ஆளுநரைச் சந்தித்து புகார் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தநிலையில், சென்னை கிண்டி ராஜ்பவனில் இன்று, தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியை அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பெஞ்சமின் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாநில தேர்தல் ஆணையம் விருப்பு வெறுப்பு இல்லாமல், ஒரு பக்க சார்பு இல்லாமல் செயல்பட வேண்டும். ஆனால், மாநில தேர்தல் ஆணையம் திமுகவின் கைப்பாவையாக இருந்துக் கொண்டு, திமுக அரசின் அராஜங்களுக்கு துணைபோவது ஜனநாயகத்தில் ஏற்ற கொள்ள முடியாதது. சுதந்திரமான, ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே தேர்தல் விதிமீறல்கள் குறித்து ஒட்டுமொத்தமாக தொகுத்து ஆளுநரிடம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.