வாஷிங்டன்:ரஷ்யாவால் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக நாடு திரும்பும்படி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் அணியில் சேர எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் எல்லையில், 1.30 லட்சம் ராணுவத்தினரை ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதனால் எழுந்துள்ள போர் பதற்றத்திற்கு இடையே, ரஷ்யா, அதன் கிழக்கு எல்லையில் உள்ள பெலாரஸ் நாட்டுடன் கூட்டு போர் பயிற்சியை துவக்கியுள்ளது.
ஏவுகணைகள், கன ரக ஆயுதங்கள், இயந்திர துப்பாக்கிகளுடன் ரஷ்ய ராணுவத்தினர் பெலாரசில் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் உக்ரைனின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளன. ரஷ்ய கடற்படை கப்பல்கள், உக்ரைனின் இரு புறம் உள்ள கடல் பகுதிக்கு விரைந்துள்ளன. அதனால் எந்த நேரத்திலும் போர் மூளும் அபாயம் உள்ளதாக அமெரிக்கா கருதுகிறது.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘டிவி’யில் தோன்றி பேசியதாவது:உலகில் மிகப் பெரிய ராணுவ பலம் உள்ள நாடுகளில் ஒன்றான ரஷ்யா உடன் நாம் பேசி வருகிறோம். எனினும் இந்த நிலைமை எந்த நேரத்திலும் விபரீதமாகலாம். அமெரிக்க – ரஷ்ய ராணுவ வீரர்கள் ஒருவரை ஒருவர் சுடத் துவங்கினால் அது உலகப் போராக இருக்கும். எனவே, உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் அனைவரும் உடனடியாக தாயகம் திரும்ப வேண்டும்.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
Advertisement