புதுடெல்லி: உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது. இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 55 இடங்களில் நாளை மறுநாள் (திங்கள்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 55 தொகுதிகளின் கள அரசியல் நிலவரம் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.
உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் இந்தத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் அதிகமாக உள்ளன. இதன் அடுத்த எண்ணிக்கையில் ஜாட் சமூகத்தினர் உள்ளனர். இதனால், பாஜக தன் அனைத்து தொகுதிகளிலும் ஜாட் மற்றும் உயர்குடி வேட்பாளர்களை போட்டியிட வைத்துள்ளது.
முக்கிய எதிர்கட்சியான சமாஜ்வாதி, சில தொகுதிகளில் மட்டும் ஜாட் உள்ளிட்ட இந்துக்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு போட்டியிடும் வாய்ப்பளித்துள்ளது. மற்ற எதிர்கட்சிகளான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி(பிஎஸ்பி) மற்றும் காங்கிரஸிலும் அதிகமான முஸ்லிம் வேட்பாளர்களே போட்டியில் உள்ளனர். இதனால், பெரும்பாலான முஸ்லிம் வேட்பாளர்களால் அவர்களது மதத்தினர் வாக்குகள் சிதறும் சூழல் உள்ளது. முஸ்லிம்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வதால், உ.பி.யின் ஆளும் பாஜக லாபம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஒன்பது மாவட்டங்களில் சஹரான்பூர், பதாயூ, பிஜ்னோர், அம்ரோஹா, சம்பல், ராம்பூர், முராதாபாத், ஷாஜஹான்பூர் மற்றும் பரேலி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் முக்கிய முஸ்லிம் தொகுதியாக ராம்பூர் உள்ளது. சமாஜ்வாதி நிறுவனர்களில் முக்கியமானவரான ஆஸம்கானின் தொகுதி இது.
உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் அமைச்சரான ஆஸம்கான் பல்வேறு வழக்குகளில் சிக்கி, கைதானதால் சிறையில் உள்ளார். சுமார் இரண்டு வருடங்களாக சிறையிலிருப்பவருக்கு ஜாமீன் கிடைக்காதமையால் அவர், சிறையிலிருந்தபடி போட்டியிடுகிறார். இங்கு ஆஸம்கானை எதிர்த்து பாஜகவின் முன்னாள் அமைச்சர் ஷிவ் பகதூர் சக்ஸேனாவின் மகன் ஆகாஷ் சக்ஸேனாவை போட்டியிட வைத்துள்ளது. காங்கிரஸ் மற்றும் பிஎஸ்பியில் முஸ்லிம் வேட்பாளர்களே நிறுத்தப்பட்டுள்ளனர்.
ராம்பூர் மாவட்ட இதர நான்கு தொகுதிகளிலும் இதேபோன்ற போட்டி உருவாகி உள்ளது. ராம்பூரின் ஸ்வேர் தொகுதியில் மட்டும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் சார்பில் ஹைதர் அலி கான் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஆஸம்கானின் மகனான அப்துல்லா ஆஸம் சமாஜ்வாதியில் போட்டியிடுகிறார். பாஜகவில் ஒரு முஸ்லிமுக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. எனினும், குறைந்தபட்சம் அதன் கூட்டணி சார்பில் முதன்முறையாக ஹைதர் அலி வேட்பாளராகி உள்ளார். அம்ரோஹாவின் நகர தொகுதியில் சமாஜ்வாதிக்கு சலீம் கான் என்பவரும், பிஎஸ்பியில் நவேத் அயாஸ் போட்டியிட, பாஜகவில் ராம்சிங் செய்னி நிறுத்தப்பட்டுள்ளார்.
ஷாஜஹான்பூரில் உபியின் மூத்த கேபினேட் அமைச்சர் சுரேஷ் கண்ணா மீண்டும் போட்டியிடுகிறார். இவர் இங்கு எட்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். இவரை எதிர்க்க வழக்கம் போல் சமாஜ்வாதி ஒரு முஸ்லிம் வேட்பாளராக தன்வீர்கான் என்பவரை நிறுத்தியுள்ளது.
இரண்டாவது கட்ட தேர்தலில் முக்கியமாகக் கருதப்படுவது தியோபந்த் தொகுதி. இதற்கு அங்கு உலகின் இரண்டாவது பெரிய மதரஸாவான தாலூரி உலூம் அமைந்திருப்பது காரணம். இங்கு ஒவ்வொரு முறையும் முஸ்லிம் வாக்குகள் பிரிவதால் பாஜகவின் வேட்பாளரே வென்று விடுகிறார். இந்தமுறை தேர்தலில் பாஜக கடந்த 2017-இல் இங்கு வென்ற பிர்ஜேஷ்சிங்கிற்கு வாய்ப்பளித்துள்ளது.
வாக்குகள் பிரிவதை தடுக்க முதன்முறையாக தியோபந்தில் சமாஜ்வாதி முஸ்லிம் அல்லாத கார்திகேய ராணா என்பவரை நிறுத்திவிட்டது. எனினும், ஐதராபாத் எம்பி ஒவைசி கட்சியான அகில இந்திய இத்தாஹாதுல் முஸ்லிமின் சார்பில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் உள்ளார். ஜமாத்-எ-உலாமா ஹிந்த் அமைப்பின் மகமூது மதானியின் சகோதரி மகன் உமர் மதானிக்கு வாய்ப்பளித்துள்ளார். இவருடன் சேர்த்து காங்கிரஸ், பிஎஸ்பியும் முஸ்லிம் வாக்குகளை பிரிக்க, பாஜக மீண்டும் பலனடையும் வாய்ப்புகள் இங்கு உள்ளன.
இதர மாவட்டங்களின் தொகுதிகளில் வழக்கத்தை விடக் குறைவாக முஸ்லிம் வேட்பாளர்கள் சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்கட்சிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். எனினும், உவைசியின் கட்சியால் முஸ்லிம் வாக்குகள் பிரியும் நிலை அகன்றது போல் தெரியவில்லை.
இந்தச் சூழல்களுக்கு ஏற்ற வகையில் இரண்டாவது கட்ட தேர்தலில் பாஜக தலைவர்களின் பிரச்சாரம், மதவாத அடிப்படையில் அமைந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத், ஷாஜான்பூரில் பாகிஸ்தானின் நிறுவனரான முகம்மது அலி ஜின்னாவிற்கு எதிராக சுமார் அரை மணி நேரம் பேசியிருந்தார்.
இதுபோல் பாகிஸ்தான், அவுரங்கசீப் மற்றும் சமாஜ்வாதி ஆட்சியில் 2013-இல் நடந்த முசாபர்நகர் மதக்கலவரம் ஆகியவையும் பாஜக மேடைகளில் தவறாமல் இடம்பெறுகின்றன. எனவே, இரண்டாவது கட்ட தேர்தலில் பாஜக வெற்றிக்கும், தோல்விக்கும் முஸ்லிம் மக்களின் வாக்குகளே காரணமாகி வருகின்றன.