பெங்களூரு: பெங்களூருவில் இன்று ஐபிஎல் ஏலம் நடைபெறும் நிலையில், ‘என்னால் எனது குழந்தைகளை விட்டுவிட்டு இந்தியா வரமுடியாது’ என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளரான நடிகை ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று 97 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர்ஜயன்ட்ஸ் என புதிதாக இரு அணிகள் இணைந்திருக்கும் நிலையில், மொத்தம் 10 அணிகள் ஏலத்தில் இருக்கின்றன. அவை ஏலத்தில் எடுப்பதற்காக மொத்தமாக 590 வீரர்கள் களம் காண்கின்றனர். அவர்களில் 227 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர். அனைத்து அணி உரிமையாளர்களும் பங்கேற்று வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளனர். அவர்களில் அதிகம் கவனிக்கப்படுபவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளரான பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தான். தற்போது இவர் வெளிநாட்டில் உள்ளார். இந்நிலையில், தான் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காதது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில், ‘என்னால் எனது குழந்தைகளை விட்டுவிட்டு இந்தியா வரமுடியாது. நாளை (இன்று) பெங்களூருவில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ளவில்லை. கடந்த சில நாட்களாக ஏலம் குறித்தும், வீரர்கள் தேர்வு குறித்தும் என்னுடைய அணியிடம் நிறைய ஆலோசனைகள் நடத்தியுள்ளேன். வீரர்கள் தேர்வு குறித்து உங்களின் (ரசிகர்களின்) பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது’ என்று அதில் தெரிவித்துள்ளார். ஐபிஎல் ஏலத்தில் நடிகை ப்ரீத்தி ஜிந்தா பங்கேற்காதது அவரது ரசிகர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.