தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி 24-வது வார்டில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் ஓ.சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார். அவர் நேற்று இரவு 24 ஆவது வார்டுக்கு உட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு அக்ரஹாரத் தெருக்களில் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் இரண்டாவது சகோதரரும் தேனி ஆவின் தலைவருமான ஓ.ராஜாவின் மகன் முத்துகுகனின் காரில் வைத்து வாக்காளர்களுக்கு இலவசமாக சேலை, வேஷ்டி வழங்குவாதக் கூறி திமுகவினர் அப்பகுதியில் குவிந்தனர். அதே வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்குமார் தலைமையிலான திமுகவினர், தென்கரை பெருமாள் கோவில் அருகே வந்து கொண்டிருந்த முத்துகுகன் காரை சிறைபிடித்து, தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் அளித்தனர். இதனால் திமுக – அதிமுகவினர் இடையே மோதல் உண்டாகும் சூழல் நிலவியதால் பெரியகுளம் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படை அலுவலர் புனிதன் தலைமையிலான அதிகாரிகள், முத்துகுகன் காரை சோதனையிட முற்பட்ட போது, அதிமுகவினர் அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சிறை பிடித்த காரை அங்கிருந்த அதிமுகவினர் எடுத்துச் செல்ல முயன்ற போது, காரை மடக்கிப்பிடித்த காவல்துறையினர் தென்கரை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். அங்கு தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கரன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் அந்த காரை சோதனை செய்தனர். அந்தக் காரில் வைக்கப்பட்டிருந்த 20 சேலை, வேஷ்டிகள் கைப்பற்றப்பட்டன.
பின்னர் காரின் உரிமையாளர் முத்துகுகன், பெரியகுளம் அருகே தான் நடத்தும் பள்ளியில் நடைபெற இருக்கும் விழாவிற்காக அங்கு பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்குவதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 50 சேலை, வேஷ்டிகள் வாங்கி காரில் வைத்திருந்ததாகக் கூறி அதற்கான ரசீதுகளை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார். அதனை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், முத்துகுகன் பள்ளியிலும் சோதனை செய்ய சென்றனர். மேலும் இது தொடர்பாக பெரியகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே காரில் இருந்து சேலை, வேட்டிகள் கைப்பற்றப்பட்டதும், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 24-வது வார்டு அதிமுக வேட்பாளர் ஓ.சண்முகசுந்தரத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் அலுவலர்களிடம் திமுகவினர் புகார் தெரிவித்தனர். இதேபோல தனது காரை திமுகவினர் சேதப்படுத்தி விட்டனர் எனக் கூறி முத்துகுகன் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். நள்ளிரவு வரை நீடித்த இச்சம்பவத்தால் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விசாரித்தோம். ”தேர்தல் விதிகளை மீறிய காரில் வைத்து வேட்டி, சேலை கொடுப்பதாக புகார் வந்தது. பறக்கும் படை அதிகாரிகள் காரைப் பறிமுதல் செய்து போலீஸாரிடம் ஒப்படைத்து, வழக்கு பதிவு செய்யக் கோரியுள்ளனர். காரின் உரிமையாளர் வேட்டி, சேலை பள்ளியில் வழங்க வைத்திருந்தாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. முதன்மை கல்வி அலுவலரிடமும் அவர்கள் வேட்டி, சேலை வழங்க அனுமதி பெற்றிருக்கவில்லை என்பதையும் உறுதி செய்துவிட்டோம்” என்றார்.