கர்நாடகத்தில் நடந்த அரிசி மில் ஆலை விபத்தில் இரு கைகளையும் பறி கொடுத்தார் 34 வயதான பசவன கெளடா. அவருக்கு தற்போது கேரள மருத்துவமனையில்
கை மாற்று அறுவைச் சிகிச்சை
வெற்றிகரமாக நடந்துள்ளது. அவருக்குப் புது வாழ்வும் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி மூளைச்சாவடைந்த கோட்டயத்தைச் சேர்ந்த நெவிஸ் சஜன் மாத்யூ என்ற இளைஞரின் கைகளைத்தான் தற்போது பசவன கெளடாவுக்குப் பொருத்தியுள்ளனர் கொச்சியில் உள்ள
அம்ரிதா மருத்துவமனை
டாக்டர்கள் குழு. மிகவும் கடினமான இந்த கை மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 14 மணி நேரம் இந்த அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு பெல்லாரியில் உள்ள அரிசி ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகியதில் பசவன கெளடாவின் இரு கைகளும் மோசமாக சேதமடைந்து விட்டன. இரு கைகளும் செயலிழந்து போய் விட்டன. பெல்லாரியில் உள்ள மருத்துவமனையில் முதலில் அவர் சேர்க்கப்பட்டார். பின்னர் பெங்களூருக்கு மாற்றப்பட்டார். அங்கு முழங்கைக்கு கீழ், இரு கைகளையும் டாக்டர்கள் வெட்டி அகற்றினர். இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு அம்ரிதா மருத்துவமனையில் கை மாற்று அறுவைச் சிகிச்சைக்காக முன்பதிவு செய்தார் பசவன கெளடா.
இத்தனை வருட காத்திருப்புக்குப் பின்னர் தற்போதுதான் கைகள் கிடைத்து அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் பசவன கெளடா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு பிசியோதெரப்பி பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அது தவிர ஆக்குபேஷனல் தெரப்பியும் அவர் செய்ய வேண்டும். குறைந்தது ஒரு வருடம் இதைச் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போதுதான் கைகள் முழுமையாக இயல்பாக இயங்க ஆரம்பிக்குமாம். இன்னும் சில மாதங்களில் அவரால் விரல்களை அசைக்க முடியும். மேலும் கைகளைப் பாதுகாப்பதற்காக வாழ்நாள் முழுவதும் சில மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்றும் கெளடாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.